விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விவசாய தொழிலாளர்களுக்கு தனித்துறையை உருவாக்க வேண்டும். குறைந்தபட்ச கூலியாக ரூ.600 வழங்க வேண்டும். பேரூராட்சி, நகராட்சி பகுதிகளுக்கும் தேசிய ஊரகவேலை உறுதி அளிப்பு திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும். மனைப்பட்டா கேட்டு மனு கொடுத்த அனைவருக்கும் வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்.
60 வயதை கடந்த விவசாய தொழிலாளர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
ஆர்ப்பாட்டம்
அதன்படி நேற்று கடலுர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் திரண்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் நெடுஞ்சேரலாதன், வெற்றி வீரன், பன்னீர், மணி, ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநிலக்குழு கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் இடைக்குழு செயலாளர்கள் ஜெயக்குமார், சுந்தரபாண்டியன், கதிர்வேல், ராமகிருஷ்ணன், தங்கசாமி, கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதையடுத்து அவர்கள் அனைவரும் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளிப்பதற்காக சென்றனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலூர் புதுநகர் போலீஸ்இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) உதயகுமார் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பிறகு முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலெக்டரை சந்தித்து மனு அளிக்க சென்றனர். மற்றவர்கள் கலெக்டர் கார் நிறுத்தும் இடம் வரை சென்று காத்திருந்தனர். அதையடுத்து கலெக்டரிடம் கோரிக்கைகள் குறித்து மனு அளித்து விட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.