பெரியகுளம் நகராட்சியில் அ.தி.மு.க.- அ.ம.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு


பெரியகுளம் நகராட்சியில் அ.தி.மு.க.- அ.ம.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x

பெரியகுளம் நகராட்சியில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.-அ.ம.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தேனி

பெரியகுளம்:

பெரியகுளம் நகராட்சியில் அவசர கூட்டம் நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமை தாங்கினார். ஆணையாளர் புனிதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சொத்துவரி உயர்வு குறித்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் குழுத்தலைவர் ஓ.சண்முகசுந்தரம் பேசுகையில், கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் பொதுமக்களின் நலன் கருதி சொத்துவரி உயர்த்தவில்லை. தற்போது கொரோனா பாதிப்பால் வருமானம் இன்றி பொதுமக்கள் தவித்து வரும்வேளையில், வரிகளை உயர்த்தக் கூடாது. எனவே சொத்துவரி உயர்வு தீர்மானத்தை எதிர்த்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.

பின்னர் அவர்கள் கூட்ட அரங்குக்கு வெளியே நின்று சொத்து வரி உயர்வு தீர்மானத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். அதேபோன்று அ.ம.மு.க. கவுன்சிலர் வெங்கடேசன் தலைமையில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.ம.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இருப்பினும் தி.மு.க. கவுன்சிலர்கள் ஆதரவுடன் சொத்து வரி உயர்வு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story