அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் கூடுதல் மனுத்தாக்கல்
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில் பதிலளிக்க ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் க்கு சென்னை கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சென்னை,
அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தில் இருந்து வரும் நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வருகிற 11- ந் தேதி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள ஆவிலிபட்டியைச் சேர்ந்த எஸ்.சூரியமூர்த்தி என்பவர் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், 'கடந்த 2017-ம் ஆண்டு கட்சி விதிகளுக்கு முரணாக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்துவரும் நிலையில் பொதுக்குழு கூட்டம் குறித்து அறிவித்திருப்பது நியாயமற்றது. ஐகோர்ட்டு உத்தரவுக்கு புறம்பாக பொதுக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 11-ந் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தாமோதரன், இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.