அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ஈபிஎஸ் தரப்பு கூடுதல் ஆவணங்கள் தாக்கல்
அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஈபிஎஸ் தரப்பு கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது.
சென்னை,
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்றது. அதில், 23 தீா்மானங்களைத் தவிர மற்ற தீா்மானங்களை நிறைவேற்றக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற அமா்வு உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில் 23 தீா்மானங்கள் நிராகரிக்கப்பட்டதுடன், கட்சியின் தற்காலிக அவைத் தலைவரான தமிழ்மகன் உசேனை நிரந்தர அவைத் தலைவராக நியமித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த பொதுக் குழு ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, நீதிமன்ற உத்தரவை மீறி ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் சண்முகம் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில் அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை கோரி ஈபிஎஸ் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வரும் 6-ம் தேதி விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், எதிர்மனுதாரரான ஓ.பன்னீர்செல்வத்தின் நடத்தையால் அதிமுகவின் செயல்பாடுகள் முடங்கியுள்ளது. அதிமுகவின் செயல்பாட்டிற்கும், உள்ளாட்சி இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கும் ஓ.பன்னீர் செல்வம் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. கட்சியின் பொருளாளர் ஆன ஓ.பி.எஸ் கட்சி நிதியை விடுவிக்காததால் ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்க முடியாத நிலை உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஈபிஎஸ் தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒற்றைத் தலைமை கோரி 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிவை குறித்தும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஈபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம்கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.