அதிமுக பொதுக்குழு வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை தொடக்கம்


அதிமுக பொதுக்குழு வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை தொடக்கம்
x
தினத்தந்தி 10 Aug 2022 9:14 AM GMT (Updated: 10 Aug 2022 9:15 AM GMT)

அதிமுக பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை,

அதிமுக பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கு தற்போஹ்டு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்துள்ளது.

கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக்கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் கோர்ட்டு தலையிட முடியாது என்பதால், சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம், விதிகளை மீறினால் கோர்ட்டை நாடலாம் என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து அதிமுக பொதுகுழுவுக்கு அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோட்டில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது என்றும், ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்த அதிகாரம் இல்லை என்பதால் பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கிய சென்னை ஐகோர்ட்டின் தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், பொதுக் குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு, அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை ஐகோர்ட்டே விசாரிக்க வேண்டும் என்றும், வழக்கை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து இந்த வழக்கு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. ஆனால், நீதிபதி கிருஷ்ணன் இந்த வழக்கை விசாரிக்க ஆட்சேபம் தெரிவித்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பு ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியது.

இதையடுத்து, அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரியிடம் ஒப்படைத்துவிட்டு இந்த வழக்கில் இருந்து விலகினார்.

தனி நீதிபதி கிருஷ்ணன் இந்த வழக்கில் இருந்து விலகியதையடுத்து அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு முன் இந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது.

வழக்கு விசாரணையின் போது அதிமுக பொதுக்குழு கூட்டம், பொதுச்செயலாளர் பதவி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை ஓ.பன்னீர் செல்வம் தரப்பும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் கோர்ட்டில் முன் வைத்து வருகின்றனர்.


Next Story