அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 24 -ஆம் தேதி வரை வெளியிட வேண்டாம் - சென்னை ஐகோர்டு உத்தரவு


அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 24 -ஆம் தேதி வரை வெளியிட வேண்டாம் - சென்னை ஐகோர்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 March 2023 7:57 AM GMT (Updated: 2023-03-19T13:30:14+05:30)

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 24 -ஆம் தேதி வரை வெளியிட வேண்டாம் என்று சென்னை ஐகோர்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. வில் பல அதிரடி மாற்றங்கள் அரங்கேறி தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. மீண்டும் பரபரப்பு கட்சியில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சம் தொட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டதோடு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து ஐகோர்ட்டு, சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு என அ.தி.மு.க.வில் பல பரபரப்பு காட்சிகள் அரங்கேறின. இதற்கிடையே அ.தி.மு.க. வில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தல் வருகிற 26-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் 18-ந்தேதியும் (நேற்று), 19-ந் தேதியும் (இன்று) நடைபெறும்' என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில், பொதுச்செயலாளர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. அ.தி.மு.க. தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக வேட்புமனுவுக்கான கட்டணம் ரூ.25 ஆயிரத்தை செலுத்தினார். அப்போது திரண்டிருந்த கட்சியினர் அவரை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர். எடப்பாடி பழனிசாமி வேட்புமனுவில் முன்மொழிபவர்கள், வழிமொழிபவர்கள் என 20 மாவட்ட செயலாளர்கள் கையெழுத்திட்டனர்.

பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைகிறது. நாளை (திங்கட்கிழமை) வேட்புமனு பரிசீலனை நடக்கிறது. 21-ந்தேதி வேட்புமனு திரும்ப பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 26-ந்தேதி காலை 9 மணிக்கு தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இன்று மதியம் 3 மணிக்கு வேட்புமனு தாக்கல் முடிந்த உடனேயே பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு என்று அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் தனித்தனியாக அவசர வழக்குகளை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை உடனே விசாரணைக்கு எடுக்க உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவிடம் அவர்கள் சார்பில் வக்கீல்கள் முறையிட்டனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி, இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு விசாரிக்க அனுமதி அளித்தார்.

அதன்படி, இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் தரப்பினர் மாறி மாறி வாதங்களை முன்வைத்தனர். இறுதியில் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ள போது, தேர்தல் அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகள் தொடரலாம் எனவும், தேர்தல் முடிவுகளை மார்ச் 24ஆம் தேதி வரை வெளியிட வேண்டாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த பிரதான வழக்கு 22ம் தேதி விசாரிக்கப்பட்டு 24ம் தேதி தீர்ப்பு வழங்குகிறேன் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.


Next Story