5.09 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் அதிமுக அரசு முறைகேடு - மா.சுப்பிரமணியன் பரபரப்பு குற்றச்சாட்டு


5.09 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் அதிமுக அரசு முறைகேடு -  மா.சுப்பிரமணியன் பரபரப்பு குற்றச்சாட்டு
x

கலெக்‌ஷன், கரப்ஷன், கமிஷன் என்ற அடிப்படையிலேயே அதிமுக ஆட்சி நடந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சிஏஜி அறிக்கையின் அடிப்படையில் முந்தைய அதிமுக அரசை மா சுப்பிரமணியன் கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து சிஏஜி அறிக்கை விபரங்களை அவர் பட்டியலிட்டார். இதுபற்றி மா சுப்பிரமணியன் கூறியதாவது:

இபிஎஸ் ஆட்சியில் டெண்டர் விதி காற்றில் பறக்கவிட்டது சிஏஜி அறிக்கையின் மூலம் அம்பலமாகி உள்ளது. 2016 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் முறைகேடுகள் தலைவிரிதாடியது அம்பலம் ஆகி உள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் கணினிகள் மூலமே ஒப்பந்ததாரர்கள் டெண்டர் எடுத்துள்ளனர். ஒரே கணினி, ஒரே ஐபி அட்ரஸ் மூலமே டெண்டருக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

3 ஆண்டுகளில் 907 டெண்டர்கள் கோரப்பட்டதில் ஒரே ஐபி முகவரியில் இருந்து ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருக்கு வேண்டப்பட்டோருக்கு டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

வெவ்வேறு நபர்களைபோல் காட்டிக்கொண்டு ஒரே நபருக்கு டெண்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன் என்ற அடிப்படையிலேயே அதிமுக ஆட்சி நடந்துள்ளது. எடப்பாடிக்கு வேண்டப்பட்ட செய்யாதுரை வீட்டில் இருந்து பல கோடி பணம், நகையை ஐடி பறிமுதல் செய்துள்ளது. பட்டியிலன மக்களுக்கான இலவச வீடுகள் கட்டும் திட்டத்திலும் முறைகேடு நடந்துள்ளது.

அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலை துறையில் 2019-2021 வரை 57 கணினிகளை பயன்டுத்தி 80க்கும் மேற்பட்ட டெண்டர் போடப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியில் ஊழல் எப்படி தலைவிரித்து ஆடியது என்பதை சிஏஜி தணிக்கை அறிக்கையில் விளக்கி உள்ளது. அதிமுக ஆட்சியில் மதுரை திருமங்கலத்தில் சாலைகள் சீரமைக்க நிதி ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளது.

அதிமுக ஆட்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெவ்வேறு பெயர்களில் மெகா ஊழலை சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் விளம்பரம் வெளியிட்டதில் ரூ.2.18 கோடி முறைகேடு நடந்துள்ளது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் சமூகநீதியை பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு சிதைத்துள்ளது. பழங்குடியினருக்கான 60 சதவீத வீடுகள் அந்த மக்களை சென்றடையவில்லை என சிஏஜி தெரிவித்துள்ளது. 5.09 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் அதிமுக அரசு முறைகேடு நடந்துள்ளது.

மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் தகுதியற்ற பயனாளிகளுக்கு 3,354 வீடுகள் முறைகேடாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சி.ஏ.ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் நடந்த முறைகேடு, மற்றும் ஊழல்களுக்கு சாட்சியாகும்.

இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தில், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு அரசு, மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்கும், வழங்குவதற்கும் எந்த காலமுறையையும் பின்பற்றவில்லை என்பதை கண்டறிந்துள்ளது.

2017- 2020ம் ஆண்டு வரை 80 சதவீத மாணவர்கள் மட்டுமே படிக்கும்போது மடிக்கணினிகள் பெற்றுள்ளதாகவும், பலருக்கு பள்ளி படிப்பு முடிந்ததன் பின்தான் லேப்டாப் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள சிஏஜி, ஒரு லட்சத்து 35 ஆயிரம் மாணவர்களுக்கு உயர் கல்வி மேற்கொள்கின்றார்களா? என்பதை உறுதிப்படுத்தாமலே, மடிக்கணினிகள் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story