அதிமுக யாருக்கும் அடிமையில்லை... பிரதான எதிர்க்கட்சி நாங்கள் தான் - எடப்பாடி பழனிசாமி அதிரடி


அதிமுக யாருக்கும் அடிமையில்லை... பிரதான எதிர்க்கட்சி நாங்கள் தான் - எடப்பாடி பழனிசாமி அதிரடி
x

அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம்,

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

"அதிமுக யாருக்கும் அடிமை இல்லை. கொள்கையில் அடிப்படையில் தான் கூட்டணி. கொள்கையின் அடிப்படையில்தான் ஒவ்வொரு கட்சியும் செயல்படுகிறது. அதிமுக ஆலமரம் போல் பரந்து விரிந்து வளர்ச்சியடைந்துள்ளது. தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி என்றால் அது அதிமுக தான். திமுக தான் தற்போது அடிமை கட்சியாக செயல்படுகிறது.

மக்கள் பிரச்சினையை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லும் பணியை எதிர்க்கட்சி என்ற முறையில் செய்து வருகிறோம். கூட்டணி என்பது அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு, தேர்தல் நேரத்தில் அமைக்கப்படுகிறது. 25 தொகுதிகளில் பாஜக வெல்ல வேண்டும் என அமித்ஷா கூறியது அவரது தனிப்பட்ட கருத்து.

தமிழகம், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பிரகாசமாக உள்ளது. அதற்காக பணியாற்றி வருகிறோம். நீட் எதிர்ப்பில் முதன்மையான கட்சி அதிமுக தான். நீட் தேர்வை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்று போராடிய கட்சி அதிமுக தான். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சிதான் இந்தியாவில் நீட் தேர்வு வர காரணமாக இருந்தது.

ஊழல் புரிந்து கைது செய்யப்பட்டவரை அமைச்சராக வைத்திருப்பதே தவறு. சிறை கைதிக்கான நம்பர் அளிக்கப்பட்டவர் அமைச்சராக தொடர்வது மோசமான முன்னுதாரணம். செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து விலக்க வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்ந்தால் மக்கள் எப்படி மதிப்பார்கள்?. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. 8 கோடி மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது" என்று கூறினார்.

மேலும் நடிகர் விஜயின் அரசியல் பேச்சு குறித்த கேள்விக்கு "ஜனநாயக நாட்டில் அரசியல் பேச அனைவருக்கும் உரிமை உண்டு" என எடப்பாடி பழனிசாமி கூறினார்.


Next Story