நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் - எடப்பாடி பழனிசாமி
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் பொம்மைக்குட்டைமேட்டில் அதிமுகவின் 51 ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும். இந்த கூட்டம் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிள்ளையார் சுழி. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் அதிமுக அழிந்துவிடும் என்று கூறினார்கள். அதன்பின்னர் அனைத்து சதிகளையும் முறியடித்து ஆட்சி பொறுபேற்றார் ஜெயலலிதா.
காலத்தால் அழிக்க முடியாத திட்டங்களை அதிமுக வழங்கியது. இந்த திட்டங்களை திமுகவால் கொடுக்க முடியுமா? திட்டங்களை நிறுத்திவிட்டீர்கள், இதற்கான தக்க பதிலடியை வரும் தேர்தலில் மக்கள் கொடுப்பார்கள்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக 3-ஆக உடைந்துள்ளது என கூறுகிறார். அதிமுக ஒன்றாகதான் உள்ளது. உடைக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் முயற்சி செய்தால் அது தோல்வியில் தான் முடியும்.
தமிழக முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை அதிமுக கொண்டுவந்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக திமுக அரசு வழக்குகளை போட்டு வருகிறது. திமுகவால் அதிமுகவை நேரடியாக எதிர்க்க முடியாது. காற்றை தடை செய்ய முடியாதது போல, அதிமுக ஆட்சிக்கு வருவதையும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.