சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு


சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x

ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டத்தில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் நகராட்சியில் அவசர கூட்டம் நகர்மன்ற தலைவர் சுமதி தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் கருணாநிதி, ஆணையர்(பொறுப்பு) சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வீட்டு வரி, காலிமனை வரி, கடைகளுக்கான வரி, குடிநீர் வரி உள்பட அனைத்து சொத்து வரிகளையும் உயர்த்துவது குறித்து மன்ற விவாத பொருளை இளநிலை உதவியாளர் ஷகிலாபானு வாசித்தார். இதையடுத்து நடந்த விவாதத்தின்போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பேசுகையில், சொத்து வரி, குடிநீர் வரியை உயர்த்துவதற்கான மன்ற விவாதப் பொருள் குறித்து ஆட்சேபனை தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் அளித்து, பொதுமக்களிடம் இருந்து எந்தவித ஆட்சேபனையும் வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டிருப்பது பொதுமக்களுக்கு தெரியாது. பொதுமக்கள் அனைவரும் சொத்து வரி உயர்வால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே நகராட்சி நிர்வாகம் முறைப்படி தண்டோரா போடும் நகராட்சி வாகனங்களின் மூலம் அனைத்து வார்டுகளிலும் தகவல் தெரிவித்தால் மட்டுமே, பொதுமக்கள் அதனை அறிந்து கொண்டு ஆட்சேபனை தெரிவிக்க முடியும். அதை செய்யாமல் பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நகராட்சியின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறி பி.ஆர்.செல்வராஜ் தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேரும் வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க. கவுன்சிலர்களுடன் கூட்டம் நடைபெற்றது. மேலும் அவர்களின் ஒப்புதலோடு சொத்து வரி உயர்வுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story