"பரோட்டா சுடுறாங்க...வட சுடுறாங்க..".."இப்ப மட்டும் ஏன் வராங்க..." - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சியாக இருந்தது என ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
ஈரோட்டில் ரூ454 கோடி செலவில் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரோட்டிலிருந்து பெருந்துறை செல்வதற்கு நான்கு வழிச்சாலை எங்கள் ஆட்சியில் அமைத்து கொடுக்கப்பட்டது. பள்ளிப்பாளையம் – ஈரோடு இணைக்க பாலம் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. ஆனால், திமுக் ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் ஆன நிலையில் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை.
இன்றைக்கு வீதி வீதியாக அமைச்சர்கள் அலைகிறார்கள். ஆனால் தேர்தலுக்கு முன்பு ஒரு அமைச்சராவது உங்களை வந்து பார்த்தார்களா?, குறைகளை கேட்டார்களா?. இப்போது தேர்தல் வந்துவிட்டதால் மக்களுக்கு நன்மை செய்வதை விட்டு விட்டு பரோட்டோ போடுவதும் வடை சுடுவதுமா அமைச்சர்களின் வேலை.
அதிமுகவை எதிர்க்க திமுகவிடம் சக்தி கிடையாது. கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைப்பதற்கு கொட்டகை அமைத்து திமுகவினர் மக்களை அடைத்து வைத்துள்ளார்கள். எட்டிய தூரம் வரை அதிமுக தெரியவில்லை என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். பிறகு ஏன் மக்களை அடைத்து வைக்கிறார்கள்.
ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த 21 மாதங்களில் மக்கள் பணத்தில் அவர் அப்பாவுக்கு நினைவு மண்டபம் கட்டினார். ஆனால், திமுக அரசு 7.5 லட்சம் முதியோர்களுக்கு உதவித் தொகையை நிறுத்தியது. பேனா சிலை வைப்பதற்கு பதிலாக முதியோருக்கு உதவி தொகையை கொடுக்கலாம். மக்களிடம் இருந்து பிடுங்கிய பணம் தற்போதும் மீண்டும் மக்களிடமே போய் சேருகிறது. அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சியாக இருந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.