குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றம்
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐப்பசி விசு திருவிழா நேற்று காலை தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5.20 மணிக்கு மேல் 6.20 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வருகிற 18-ந் தேதி வரை நடைபெறும் விழாவில் தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வருகிற 13-ந் தேதி தேரோட்டமும், 15-ந் தேதி காலை 9.30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் நடராஜமூர்த்திக்கு தாண்டவ தீபாராதனையும், 16-ந் தேதி காலை 10.30 மணிக்கு சித்திர சபையில் நடராஜ மூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும் நடக்கிறது. 18-ந் தேதி விசு தீர்த்தவாரி காலை 9.40 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் கவிதா, கோவில் நிர்வாக அதிகாரி கண்ணதாசன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.