விமான நிலைய விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்கும்


விமான நிலைய விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்கும்
x
தினத்தந்தி 25 Dec 2022 12:15 AM IST (Updated: 25 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் விமான நிலைய விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் விமான நிலைய விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

பெரியார் சிலைக்கு மாலை

தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது:-

பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகிய முப்பெரும் தலைவர்களின் உருவமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இழந்த பெருமைகளை மீட்டெடுத்து சிறந்த ஆட்சியை நடத்தி வருகிறார். நிதி நிலைமைகளை சரி செய்து 85 சதவீத வாக்குறுதிகளை முழுவதுமாக நிறைவேற்றி உள்ளார். கோவை மாவட்டத்துக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளோடு கூடுதலாக திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

விமான நிலைய விரிவாக்கம்

விமான நிலைய விரிவாக்கத்துக்கு 1½ ஆண்டுகளில் ரூ.1,084 கோடி செலவிடப்பட்டு நிலங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்களில் நில எடுப்பு பணிகள் நிறைவடைந்து விரிவாக்க பணிகள் தொடங்கும். கோவை மாநகராட்சியில் 114 கிலோ மீட்டர் மண் சாலைகள் உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் தார்சாலைகளாக மாற்றி இருக்கலாம். ஆனால் அவர்கள் செய்யவில்லை. பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட சாலைகளையும் சரி செய்யவில்லை. தற்போது ரூ.211 கோடியில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதுடன், கூடுதலாக ரூ.19 கோடி சிறப்பு நிதியை முதல்-அமைச்சர் விடுவித்துள்ளார். இதன் மூலம் விடுபட்ட சாலைகளும் சீரமைக்கப்படும்.

பொய் சொல்கிறார்கள்

ரூ.345 மதிப்புள்ள காதொலி கருவியை கொடுத்துவிட்டு ரூ.10 ஆயிரம் என பொய் சொல்லக்கூடியவர்கள் பா.ஜ.க.வினர். பெட்ரோல்-டீசல் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது. கியாஸ் சிலிண்டர் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது. கியாஸ் மானியம் எத்தனை பேருக்கு வருகிறது. ஒரு பைசா கூட வரவில்லை. இப்படிப்பட்ட சூழலில் சிறந்த ஆட்சி நடத்தும் தமிழகத்திற்கு களங்கம் விளைவிக்க கூடிய வகையில் சமூக வலைத்தளத்தை பா.ஜ.க.வினர் பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story