ஏ.ஐ.டி.யு.சி.யினர் மறியல் போராட்டம் ; 178 பேர் கைது


ஏ.ஐ.டி.யு.சி.யினர் மறியல் போராட்டம் ; 178 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 24 Jan 2023 6:47 PM GMT)

பண்ருட்டி மற்றும் சிதம்பரத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 178 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்

பண்ருட்டி,

கடலூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி.சார்பில் பண்ருட்டி கும்பகோணம் சாலை தபால் நிலையத்தின் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வளர்மதி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் துரை, மாவட்ட விவசாய சங்க தலைவர் சிவக்குமார், நிர்வாகிகள் பாஸ்கர், சக்திவேல், ஞானசேகர், மோகன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

அரசு மற்றும் தனியார் துறையில் தொடர்ந்து 240 நாட்கள் பணிபுரிந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும். மருத்துவத்துறை, அரசு டாஸ்மாக், கூட்டுறவு மற்றும் பொதுத்றைகளில் எந்த தொழிலில் பணிபுரிந்தாலும் ரூபாய் 21 ஆயிரம் மாத ஊதியம் வழங்க வேண்டும். நல வாரிய பதிவுகளை எளிமைப்படுத்தி தாமதம் இல்லாமல் நிதி பலன்களை வழங்க வேண்டும், பண்ருட்டி பகுதியில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு தனியாக மணல் குவாரிகள் அமைத்து கொடுத்து மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 80 பேரை பண்ருட்டி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை மாலையில் விடுவித்தனர்.

சிதம்பரம்

இதேபோல் சிதம்பரம் கஞ்சி தொட்டி மெயின் ரோட்டில் நேற்று காலை ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட துணை செயலாளர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மாவட்டக்குழு சித்ரா, மாவட்ட பொருளாளர் வேல்வேந்தன், ஜீவா மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் புலவழகன், பெண்கள் அமைப்பு மாவட்ட செயலாளர் சந்திரலேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் மணி வாசகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வி.எம். சேகர், மாவட்டக்குழு உறுப்பினர் தமிமுன் அன்சாரி, கட்டட சங்க மாவட்ட துணை தலைவர் ராஜதுரை ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

மாட்டுவண்டி தொழிலாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு என தனியாக மணல் குவாரி அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 98 பேரை சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையிலான போலீசார், கைது செய்து அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் விடுவித்தனர்.


Next Story