நடிகர் ராஜ்கிரணின் மனைவி ஆஜர்


நடிகர் ராஜ்கிரணின் மனைவி ஆஜர்
x

நடிகர் ராஜ்கிரணின் மனைவி, போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரானார்.

திருச்சி

முசிறி:

நடிகர் ராஜ்கிரணின் மனைவி

திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் வணிக வரித்துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கும், பத்மஜோதி என்பவருக்கும் திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பத்மஜோதி இளங்கோவனை விட்டு பிரிந்து சென்னை சென்றார்.

அங்கு நடிகர் ராஜ்கிரணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து பத்மஜோதி கதீஜா என்று அழைக்கப்பட்டார். அவரது மகள் பிரியா ஜீனத்பிரியா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டார்.

சமூக வலைத்தளங்களில் அவதூறு

இந்நிலையில் ஜீனத்பிரியா சினிமா மற்றும் நாடக நடிகர் முனீஸ்ராஜ் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் அவரது தாய் கதீஜா மற்றும் ராஜ்கிரணுக்கு உடன்பாடு இல்லாததால், அவர் தனது பெயரை எங்கும் பயன்படுத்தக்கூடாது, அவர் தனது வளர்ப்பு மகள் இல்லை என்று ராஜ்கிரண் அறிவித்தார்.

இதையடுத்து ஜீனத்பிரியா, முனீஸ்ராஜுடன் துறையூரில் உள்ள தனது தந்தை இளங்கோவன் வீட்டிற்கு வந்து, அவருடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜ்கிரண், கதீஜா ஆகியோர் குறித்து ஜீனத்பிரியா சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கதீஜா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.

துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜர்

அந்த புகாரை திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வழியாக முசிறி துணை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு கமிஷனர் அனுப்பினார். இதையடுத்து துணை சூப்பிரண்டு யாஸ்மின், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காவேரி முன்னிலையில் ஜீனத்பிரியாவிடம் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து இருதரப்பினரும் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ஆஜராக துணை சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

அதன்பேரில் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் ேநற்று கதீஜா, ஜீனத்பிரியா உள்ளிட்ட இருதரப்பினரும் துணை சூப்பிரண்டு யாஸ்மின் முன்னிலையில் நேற்று ஆஜராகினர். அப்போது அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, இருதரப்பினரும் சமூக வலைத்தளங்கள் வழியாக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வீடியோ, ஆடியோ வெளியிடக்கூடாது. இரு தரப்பினருக்கும் பிரச்சினை ஏற்பட்டால் போலீசார் மற்றும் கோர்ட்டு வாயிலாக தீர்வு காண வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டு போலீசாரின் அறிவுரைப்படி செயல்படுவதாக எழுதி கொடுத்துவிட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story