அல் உம்மா தலைவர் பாஷாவுக்கு இடைக்கால ஜாமீன் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அல்-உம்மா தலைவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கோயம்புத்தூர்,
கடந்த 1998-ம் ஆண்டு கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல் உம்மா தலைவர் பாஷாவை முன்கூட்டியே விடுவிக்க கோரி அவரது மகள் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "29 ஆண்டுகளாக எனது தந்தை சிறையில் உள்ளார். குண்டு வெடிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட குறைவான தண்டனையை தனது தந்தை அனுபவித்துவிட்ட நிலையில், தற்போது ஆயுள் தண்டனையை மட்டுமே அனுபவித்து வருகிறார். எனவே எனது தந்தையை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும். வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை எனது தந்தைக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுந்தர் மோகன், சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வக்கீல் ஆஜராகி, இடைக்கால ஜாமீன் வழங்குவதில் அரசுக்கு ஆட்சேபனை இல்லை என கூறினார். இதையடுத்து, பாஷாவுக்கு 3 மாதங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய நீதிபதிகள், வழக்கு குறித்து அரசு பதில் அளிக்க உத்தரவிட்டனர்.