ரூ.18.40 கோடிக்கு மது விற்பனை


ரூ.18.40 கோடிக்கு மது விற்பனை
x

நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களில் ரூ.18 கோடியே 40 லட்சத்துக்கு மது விற்பனையாகி இருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாமக்கல்

தீபாவளி பண்டிகை

முந்தைய காலத்தில் தீபாவளி கொண்டாட்டத்தில் புத்தாடை, பட்டாசு, பலகாரம் போன்றவை முக்கிய இடம் பிடிக்கும். தற்போது இந்த வரிசையில் மதுவும் இணைந்து உள்ளது. எனவே மதுபிரியர்களை உற்சாகப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் ஒவ்வொரு மதுபான கடையிலும் தீபாவளி பண்டிகையையொட்டி தேவையான அளவு மதுபாட்டில்களை இருப்பு வைத்து இருந்தது. புதிய ரகங்களை அறிமுகம் செய்தது.

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 189 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவை அனைத்திலும் தீபாவளி பண்டிகையையொட்டி மதுபான பாட்டில்கள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. மதுபிரியர்கள் கடந்த 22-ந் தேதி முதலே மதுபாட்டில்களை வாங்க தொடங்கினர். இதனால் பெரும்பாலான கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் விற்பனையும் இருமடங்கு அதிகரித்தது.

ரூ.18.40 கோடிக்கு மது விற்பனை

இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.3¼ கோடி முதல் ரூ.3½ கோடி வரை மதுபாட்டில்கள் விற்பனையாகும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இதைவிட சற்று அதிகமாக இருக்கும். ஆனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 22-ந் தேதி ரூ.4 கோடியே 90 லட்சம், 23-ந் தேதி ரூ.7 கோடி, நேற்று முன்தினம் அதாவது தீபாவளி அன்று ரூ.6½ கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. மொத்தமாக 3 நாட்களில் மட்டும் ரூ.18 கோடியே 40 லட்சத்துக்கு மது வகைகள் விற்பனையாகி உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story