சாராயம் கடத்தி வந்த 8 பேர் தப்பி ஓட்டம்


சாராயம் கடத்தி வந்த 8 பேர் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 27 July 2022 5:28 PM IST (Updated: 27 July 2022 5:28 PM IST)
t-max-icont-min-icon

நாகூர் அருகே சாராயம் கடத்தி வந்த 8 பேர் தப்பி ஓடினர். 500 லிட்டர் சாராயம் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாகப்பட்டினம்

நாகூர் அருகே சாராயம் கடத்தி வந்த 8 பேர் தப்பி ஓடினர். 500 லிட்டர் சாராயம் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

8 பேர் தப்பி ஓட்டம்

நாகை மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் அறிவுறுத்தலின்படி சாராய கடத்தலை தடுக்கும் வகையில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாகூர் அருகே திட்டச்சேரி சாலையில் நேற்று இரவு தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக 4 மோட்டார் சைக்கிள்களில் 8 பேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களை வழிமறித்து போலீசார் விசாரணை நடத்த முயன்றபோது அவர்கள் மோட்டார் சைக்கிள்களையும், அதில் இருந்து சில மூட்டைகளையும் அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

8 பேருக்கு வலைவீச்சு

இதையடுத்து போலீசார் அந்த மூட்டைகளை பார்த்தபோது பாக்கெட் சாராயம் இருந்தது. இதுதொடர்பான விசாரணையில் 8 பேரும் காரைக்காலில் இருந்து மோட்டார் சைக்கிள்களில் சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து மூட்டைகளில் இருந்து 500 லிட்டர் சாராயத்தையும், இதை கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட 4 மோட்டார் சைக்கிள்களையும் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து, நாகூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 8 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story