மன்னார் வளைகுடாவில் சீற்றம்: கரை ஒதுங்கி கிடக்கும் கடல் பாசிகள்


மன்னார் வளைகுடாவில் சீற்றம்: கரை ஒதுங்கி கிடக்கும் கடல் பாசிகள்
x
தினத்தந்தி 3 Sep 2022 4:15 PM GMT (Updated: 3 Sep 2022 4:16 PM GMT)

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால் உச்சிப்புளி அருகே உள்ள கடற்கரை பகுதியில் பாசிகள் கரை ஒதுங்கி கிடக்கின்றது.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள 21 தீவுகளை சுற்றி உள்ள கடல் பகுதியில் கடல் பசு, டால்பின், ஆமை, நட்சத்திர மீன்கள், கடல் குதிரை, கடல் பன்றி, பவளப்பாறைகள் உள்ளிட்ட 3000-க்கும் மேற்பட்ட அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதை தவிர பல வகையான கடல்பாசிகள் இயற்கையாகவே கடலுக்குள் அடியில் வளர்ந்து நிற்கின்றன.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாகவே வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டு வருகின்றது.

இதனிடையே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றம் காரணமாக கடலின் அடியில் உள்ள பாசிகள் கடலில் இருந்து மேல் பகுதிக்கு வந்து கடல் அலை மற்றும் நீரோட்ட வேகத்தால் உச்சிப்புளி கடற்கரை பகுதி முழுவதும் பரவி கிடக்கின்றன.

இதில் பாசிகளோடு தாழை செடிகளும் கரை ஒதுங்கி கிடக்கின்றன. கடலுக்குள் வளர்ந்து நிற்கும் ஒரு சில பாசி மற்றும் இயற்கை தாவரங்களை நம்பித்தான் கடல் பசு உள்ளிட்ட பலவகை அரிய வகை கடல்வாழ் உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

#மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால் உச்சிப்புளி அருகே உள்ள மானாங்குடி கடற்கரை பகுதியில் நேற்று கரை ஒதுங்கி கிடந்த பாசிகள்.


Next Story