4,400 குழாய் இணைப்புகளுக்கும் அம்ருத் திட்டத்தில் குடிநீர் வழங்க வேண்டும்


4,400 குழாய் இணைப்புகளுக்கும் அம்ருத் திட்டத்தில் குடிநீர் வழங்க வேண்டும்
x

பள்ளிகொண்டாவில் 4,400 குழாய் இணைப்புகளுக்கும் அம்ருத் திட்டத்தில் குடிநீர் வழங்க வேண்டும் என்று பேரூராட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.

வேலூர்

அம்ருத் திட்டத்தில்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் சுபபிரியா குமரன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் வசிம்அக்ரம், பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி ஆகியோர் முன்னிைல வகித்தனர். சந்தோஷ் தீர்மானங்களை வாசித்தார்.

கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் இரண்டு பேரை தவிர 16 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பேசியதாவது:-

பள்ளிகொண்டா பேரூராட்சியில் வசிக்கும் பொது மக்கள் 4,400 குழாய் இணைப்பு பெற்றுள்ளனர். அவர்களுக்கு அம்ருத் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க வேண்டும். துப்புரவு பணியாளர்கள் சரிவர குப்பை வாருவதில்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே விடுபடாமல் குப்பைகளை அள்ள வேண்டும்.

கண்காணிப்பு கேமரா

எல்லையம்மன் கோவில் விழா தொடங்கி உள்ளது. தெப்பக்குளத்தை சுற்றி குப்பைகள் அதிகமாக சேருகிறது. பேரூராட்சி சார்பில் ஆங்காங்கே ராட்சத குப்பைதொட்டிகளை வைத்து உடனுக்குடன் அதை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதால் ஒவ்வொரு வார்டிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். எல்லையம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பெண் பக்தர்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. தற்காலிகமாக பேரூராட்சி சார்பில் கழிப்பறை வசதியை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

கூட்டத்தில் எல்லையம்மன் கோவில் தேரை நிறுத்த நிழற் கூடம் கட்டுவதற்கு ரூ.3 லட்சம் பேரூராட்சி சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் பணியில் ஈடுபடக்கூடாது என்பதற்காக இலவசமாக வழங்கப்பட்டுள்ள டோல் பிரி நம்பரில் தகவல் கொடுத்தால் அவர்கள் வந்து கழிவுநீரை எடுத்துச் செல்வார்கள் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story