கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைதான 6 பேருக்கும் வரும் 22ம் தேதி வரை நீதிமன்ற காவல்


கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைதான 6 பேருக்கும் வரும் 22ம் தேதி வரை நீதிமன்ற காவல்
x

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைதான 6 பேருக்கும் வரும் 22ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து என் ஐ ஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை,

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23-ந் தேதி அதிகாலை 4 மணியளவில் கார் வெடித்து ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் பலியானார். இந்த வழக்கில் முகமது அசாருதீன் (23), அப்சர்கான் (28), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (26), முகமதுநவாஸ் இஸ்மாயில் (27) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 6 பேர் மீது உபா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் கோவை கார் வெடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர் பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.

இதனால் நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் நீதிமன்ற வளாகம் மற்றும் உள்ளே செல்லும் வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் கார் வெடிப்பு சம்பவத்தில் கைதான 6 பேரையும் வரும் 22-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க என் ஐ ஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 6 பேரையும் கோவை மத்திய சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கவும், வரும் 22ம் தேதி மீண்டும் என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரசிடப்பட்டுள்ளது.

1 More update

Next Story