என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் - முன்னாள் ஐிஜி பொன் மாணிக்கவேல்


என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் - முன்னாள் ஐிஜி பொன் மாணிக்கவேல்
x

என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என முன்னாள் ஐி.ஜி. பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் முன்னாள் ஐிஜி பொன் மாணிக்கவேல் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

சிபிஐயோ சிபிசிஐடியோ யாருமே சிலைக் கடத்தல் தீனதயாளனை கைது செய்யவில்லை. முதல் முறையாக நான்தான் கைது செய்தேன். என்னை பார்த்து குற்றவாளியை விட்டுவிட்டீர்கள் என சொன்னால் நியாயமா? 58 ஆண்டுகள் பிடிக்காமல் இருந்தவரை நான் பிடித்தேன். 1983 ஆம் ஆண்டு முதல் எத்தனை அதிகாரிகள் இருந்தார்கள்.

இவர்கள் எல்லாம் எங்கே போனார்கள். இவர்கள் பிடிக்காமல் இருந்த குற்றவாளியை நான் பிடித்தேன். அதுவும் 833 தெய்வ விக்கிரகங்களை வீட்டிலிருந்து மீட்டேன்.

2012-ம் ஆண்டிலிருந்து ஒரு சிலை கூட வெளிநாட்டுக்கு போக முடியாதபடி நான் அத்தனையையும் செய்தேன். 2016-இல் தீனதயாளனை நான் பிடித்தேன். அப்போதெல்லாம் ஐகோர்ட்டு எனக்கு அதிகாரம் கொடுக்கவில்லை. நான் தனிப்பட்ட முறையில் ஒரு டிஐஜி, 7 போலீஸை வைத்து பிடித்தேன். அந்த தீனதயாளனின் வீட்டில் 30 நாட்கள் நான் இருந்தேன். அவரை கைது செய்து 90 நாட்கள் சிறையில் அடைத்தேன்.

நான் ஓய்வு பெற்று வெளியே வந்ததும் இரண்டே முக்கால் ஆண்டுகளாக என்னை போன்று பெரிய அதிகாரிகள் பணியாற்றி வந்த போதிலும் அவர்கள் அந்த வழக்கு குறித்து குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யவில்லை. இந்த அதிகாரிகள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் வரி பணத்தில் எதற்காக சம்பளம் வாங்குகிறார்கள். இரண்டை வருஷம் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் இருப்பதால் குற்றவாளிகளின் வீட்டிலேயே திருடப்பட்ட பொருட்கள் இன்னமும் இருக்கு.

அர்த்தநாரீஷ்வரர் சிலை கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் தீனதயாளன் அப்ரூவர் ஆகியுள்ளார். அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்ரூவர் ஆனவரை விடுதலை செய்ய சட்டமே சொல்கிறது. அப்ரூவர் எடுப்பது சாதாரண விஷயம் இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story