அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்


அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
x

வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மங்கத்ராம் சர்மா உத்தரவிட்டார்.

திண்டுக்கல்

ஆய்வுக்கூட்டம்

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அரசு முதன்மை செயலாளரும், திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான மங்கத்ராம் சர்மா தலைமை தாங்கினார். கலெக்டர் விசாகன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தின் போது, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள், அணைகளின் நீர்மட்டம் ஆகியவை குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கேட்டறிந்தார். மேலும் மழைக்காலங்களில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இடங்கள், அந்த பகுதிகளில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதேபோல் மழைக்காலத்தில் நீர்நிலைகளில் சிக்குபவர்களை மீட்கும் பணியில் ஈடுபடும் குழுவினர் அதற்கான மீட்பு உபகரணங்களை வைத்திருக்கின்றனரா? அவை நல்ல நிலையில் இருக்கின்றனவா? என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துகொண்டார்.

மீட்பு உபகரணங்கள்

மேலும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதா? மழைக்காலத்தில் மண்சரிவு ஏற்படும் இடங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், மரங்கள் சாய்ந்து விழுந்தால் அவற்றை வெட்டி அகற்றவும் தேவையான நவீன கருவிகள் தயார் நிலையில் இருக்கிறதா? என்றும் அதிகாரிகளிடம் கேட்டு ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்மழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டாலும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது. மழை வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்காமல் தடுக்க அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைச்சாமி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story