அனைத்து வளர்ச்சிப்பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்
கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து வளர்ச்சிப்பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என கூடுதல் கலெக்டர் மதுபாலன் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
புவனகிரி
கடலூர் மாவட்ட திட்ட இயக்குனரும், கூடுதல் கலெக்டருமான மதுபாலன் நேற்று கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் ஒன்றியத்துக்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், தானே வீடு கட்டும் திட்டம், சாலை பணிகள், புதிய அலுவலக கட்டிட பணி, குடிநீர் குழாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் சரியாக நடந்து உள்ளதா? அவை பதிவேடுகளில் முறையாக ஏற்றப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்தார்.
அப்போது சில பணிகளில் குறைகள் இருந்ததை கண்டுபிடித்து அலுவலர்களை எச்சரித்த அவர் அனைத்து பணிகளையும் பொதுமக்களுக்கு சரியான முறையில் செய்து கொடுக்க வேண்டும். எதையும் எதிர்பார்த்து செய்யக்கூடாது, பணிகளில் முறைகேடு நடந்தால் துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இப்ராஹிம், பாலகிருஷ்ணன், துணைவட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், செந்தில்குமார், ஒன்றிய பொறியாளர்கள் முருகானந்தம், வனிதா மற்றும் அலுவலக ஊழியர்கள் உடன் இருந்தனர்