அனைத்து கடன் விண்ணப்பங்கள் மீதும் 15 நாட்களுக்குள் தீர்வுகாண வேண்டும்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து கடன் விண்ணப்பங்கள் மீதும் 15 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என வங்கி அதிகாரிகளுக்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் உத்தரவிட்டார்
கள்ளக்குறிச்சி
வங்கியாளர்கள் கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கிகளின் சார்பில் அனைத்து வங்கியாளர்கள் கூட்டமைப்பு கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கக திட்ட இயக்குநர் சுந்தரராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
கடன் விண்ணப்பங்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு வங்கிகளின் கடனுதவி மிகமுக்கியமானதாகும். மாவட்ட தொழில் மைய திட்டங்கள், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்டங்கள், தாட்கோ துறையின் திட்டங்கள் மற்றும் இதர துறைகளில் சிறு, குறு தொழிற்கடன்கள், தனிநபர் கடன்கள் தொடர்பான மனுக்கள் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் மீது உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து வங்கிகளும் நிலுவையில் உள்ள கடன் விண்ணப்பங்கள் மீது 15 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். அதன் விவரங்கள் குறித்த அறிக்கைகளை தொடர்புடைய அலுவலர்களுக்கும், விண்ணப்பதாரர்களுக்கும் தெரிவித்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா, மாவட்ட தாட்கோ மேலாளர் மாயக்கண்ணன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட இயக்குநர் ராஜேஷ்குமார் மற்றும் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.