புதுக்கோட்டையில் அனைத்து கல் குவாரிகளும் செயல்பட தடை
ஐகோர்ட்டு உத்தரவுப்படி புதுக்கோட்டையில் அனைத்து கல் குவாரிகளும் செயல்பட தடை விதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ஒரு கல் குவாரி தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் கல் குவாரிகள் செயல்பாடுகள், கனிம வளங்கள் அதிகமாக எடுக்கப்பட்டது தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருந்தனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து குவாரிகளுக்கும் தடை விதித்து, குவாரிகளை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, கனிம வள இயக்குனர் ஆய்வு செய்து 2 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தனர். இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து குவாரிகளும் செயல்பட தடை விதித்து அமல்படுத்தப்பட்டன. இது தொடர்பாக கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் கேட்ட போது, 'மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி மாவட்டத்தில் அனைத்து குவாரிகளும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அந்தந்த கல் குவாரி உரிமையாளர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டன. மாவட்டத்தில் இன்று (அதாவது நேற்று) கல் குவாரிகள் இயங்கவில்லை. ஐகோர்ட்டு உத்தரவுப்படி மாவட்டத்தில் கல் குவாரிகளை ஆய்வு செய்து 2 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும்' என்றனர்.