அனைத்து ஏரிகளிலும் தண்ணீர் நிரம்பியுள்ளது: சென்னைக்கு குடிநீர் பற்றாக்குறை வராது - அமைச்சர் கே.என்.நேரு தகவல்


அனைத்து ஏரிகளிலும் தண்ணீர் நிரம்பியுள்ளது: சென்னைக்கு குடிநீர் பற்றாக்குறை வராது - அமைச்சர் கே.என்.நேரு தகவல்
x

செம்பரம்பாக்கம் உள்ளிட்ட அனைத்து ஏரிகளிலும் போதுமான அளவுக்கு தண்ணீர் நிரம்பி உள்ளதால் சென்னைக்கு குடிநீர் பற்றாக்குறை வராது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சென்னை

சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட பெரம்பூர் காமராஜ் நகரில் ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, கலாநிதி வீராசாமி எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டில் 426 பேர் பாதிப்படைந்தனர். இந்த ஆண்டில் இதுவரை 346 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மழையின் காரணமாக தாமதப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளை ஒருவார காலத்துக்குள் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆறுகள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெருமழை பெய்தாலும் மக்களை பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பருவ மழைக்கு முன்னதாக சாலைப்பணிகள் மற்றும் சாலை சீரமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. மாநகராட்சிப் பகுதியில் சென்னை குடிநீர் வாரியம், சென்னை மெட்ரோ ரெயில், மின்துறை உள்ளிட்ட பல்வேறு சேவைத் துறையிலும் பணிகள் நடைபெற்று வருவதையொட்டி அத்துறைகளை ஒருங்கிணைத்து சாலை அமைக்கும் பணிகள் விரைவாக முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பருவ மழையை முன்னிட்டு எவ்வித சாலை வெட்டுக்களும் சேவைத் துறைகளால் மேற்கொள்ள கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கினால் ஒரு மணி நேரத்தில் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின்கீழ் 150 எம்.எல்.டி. குடிநீர் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனை கள ஆய்வு மேற்கொண்டு இருக்கிறேன். முதல்-அமைச்சரால் இத்திட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

செம்பரம்பாக்கம் உள்ளிட்ட அனைத்து ஏரிகளிலும் போதுமான அளவுக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. எனவே, சென்னைக்கு குடிநீர் பற்றாக்குறை ஏதும் வராது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம், கத்திவாக்கம் ரெயில் நிலைய சாலை (மேற்கு), எண்ணூர் துறைமுகம் அனல்மின் நிலையப் பகுதியில் தமிழ்நாடு அரசு மற்றும் காமராஜர் துறைமுகத்தின் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறைகளுடன் கூடிய சென்னை தொடக்கப்பள்ளி கட்டிடத்தையும் அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் ஆர்.டி.சேகர், கே.பி.சங்கர், எஸ்.சுதர்சனம், துணை மேயர் மு.மகேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


Next Story