தமிழகம் முழுவதும் தொழில் அமைப்பினர் வேலை நிறுத்தம்


தமிழகம் முழுவதும் தொழில் அமைப்பினர் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 23 Sept 2023 12:15 AM IST (Updated: 23 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மின்கட்டண உயர்வை கண்டித்து வருகிற 25-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் தொழில் அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

கோயம்புத்தூர்

கோவை

மின்கட்டண உயர்வை கண்டித்து வருகிற 25-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் தொழில் அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

மின்கட்டண உயர்வால் பாதிப்பு

கோவை ரேஸ்கோர்சில் உள்ள கொடிசியா அலுவலகத்தில் கொடிசியா தலைவர் திருஞானம், சீமா சங்க தலைவர் விக்னேஷ், காட்மா சங்க தலைவர் சிவக்குமார், கோப்மா சங்க தலைவர் மணிராஜ், ஐ.டி.எப். சங்க தலைவர் சத்யமூர்த்தி, ஓஸ்மா சங்க தலைவர் அருள்மொழி உள்ளிட்ட தமிழ்நாடு தொழில் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

மின் கட்டண உயர்வால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. மேலும் பொருளாதார மந்த நிலை, மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல இன்னல்களை தொழில்துறை சந்தித்து வருகிறது. மின் கட்டண உயர்வால் தொழில்கள் நிரந்தரமாக முடங்கிவிடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து தமிழக அரசிடம் பலமுறை முறையிட்டும் தீர்வு கிடைக்கப்படவில்லை.

வேலைநிறுத்த போராட்டம்

பீக் ஹவர் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், மின்சார நிலை கட்டண உயர்வுகளை திரும்பப்பெற வேண்டும். எனவே மின் கட்டண உயர்வை ரத்து செய்து பழைய கட்டண முறையையே அமல்படுத்த வேண்டும். வருடா வருடம் ஒரு சதவீத மின் கட்டணம் உயர்வு செய்ய வேண்டும். சோலார் நெட்வொர்க்கிங் கட்டணத்தை முற்றிலுமாக நீக்க வேண்டும்.

112 - 150 கிலோ வாட்ஸ் உபயோகிக்கும் தொழிற்சாலைகள் தனியாரிடமிருந்து நேரடியாக மின்சாரம் வாங்கும் நடைமுறைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் தமிழ்நாடு முழுவதும் வருகிற 25-ந் தேதி 165 தொழில் அமைப்புகள் சார்பில் தொழிற்சாலைகளில் வேலை நிறுத்தம் செய்து, கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளன.

3 கோடி தொழிலாளர்கள்

கோவையில் கொடிசியா, காட்மா, சீமா, ஓஸ்மா, கோப்மா உள்ளிட்ட தொழில் அமைப்புகள் பங்கேற்கின்றன. இதனால் மாநிலம் முழுவதும் அன்றைய தினம் ரூ.1,500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.

அத்துடன் 3 கோடி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இந்த மாநிலம் தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் மாநிலம் முழுவதும் 50,000 நிறுவனங்கள் ஈடுபட உள்ளன. எங்களது கோரிக்கைகளுக்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story