மின்வாரிய அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு; பா.ம.க.வினர் நூதன போராட்டம்
மின்வாரிய அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக பா.ம.க.வினர் மின்சார வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த தேவனேரி கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதடைந்ததால் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து மின்தடையால் பாதிக்கப்பட்ட அந்த கிராம மக்கள் மாமல்லபுரம் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று உடனடியாக தங்கள் பகுதியில் பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை மாற்றி புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். அங்கு உள்ள அதிகாரிகள் ரூ.14 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
லஞ்சம் கேட்ட மின்சார வாரிய அதிகாரியை கண்டித்து மாமல்லபுரம் நகர பா.ம.க.வினர் நேற்று செங்கல்பட்டு மத்திய மாவட்ட பா.ம.க. செயலாளர் ஏழுமலை தலைமையில், மாமல்லபுரம் நகர செயலாளர் ரா.ராஜசேகர், பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினர் பி.வி.கே.வாசு, பா.ம.க. மாவட்ட அமைப்பு செயலாளர் என்.எஸ்.ஏகாம்பரம், திருப்போரூர் ஒன்றிய கவுன்சிலர் பூ.தட்சணாமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் பா.ம.க.வினர் ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, பூ, பழத்துடன் சில்லரை காசுகளாக ரூ.14 ஆயிரத்தை கையில் ஏந்திகொண்டு, மேளதாளத்துடன் மாமல்லபுரம் கங்கை கொண்டான் மண்டபம் அருகில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மின்சார வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு பா.ம.க.வினர் கூட்டமாக சில்லரை காசுடன் மின்வாரிய அலுவலகம் உள்ளே சென்றனர். அங்கு அதிகாரிகள் யாரும் அலுவலக அறையில் இல்லாததால் மின்வாரிய பணியாளர் ஓருவரின் மேசையில் பாக்கு, பூ, பழம், லஞ்ச பணம் ரூ.14 ஆயிரம் சில்லரை காசுகள் உள்ள தட்டை வைத்தனர். இது போன்று லஞ்சம் கேட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. நிர்வாகிகள் தயாளன், அரசியல் ஆறுமுகம், ராமச்சந்திரன், எம்.ஆர்.சீனிவாசன், த.சந்துரு, எம்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.