அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு: ஆம்னி பஸ் சங்கத்தின் சார்பில் கட்டணம் நிர்ணயம்


அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு: ஆம்னி பஸ் சங்கத்தின் சார்பில் கட்டணம் நிர்ணயம்
x

ஆம்னி பஸ் பயணிகளிடம் கூடுதலாக பெறப்பட்ட கட்டணத்தையும் திருப்பி அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என கூறப்பட்டு உள்ளது.

சென்னை

தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்பட பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள், திருமண சீசன் போன்ற விழா காலங்களில் அரசு மற்றும் ஆம்னி பஸ்கள், ரெயில்களில் பயணம் செய்வதற்கு 'டிக்கெட்' கிடைத்துவிட்டால், ஏதோ சாதித்தது போன்ற உணர்வு பயணிகள் மனதில் வெளிப்படுகிறது.

ஏனென்றால் பண்டிகை, விழா காலங்களின்போது சொந்த ஊருக்கு சென்று உற்றார்-உறவினர்கள், நண்பர்களை சந்தித்து, மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்ற ஆவல், ஆர்வம் பெரும்பாலானவர்களுக்கு மேலோங்கி இருக்கிறது.

மேலும் அவசியம் மற்றும் அத்தியாவசிய பயணத்தை தவிர்க்க முடியாத சூழல் ஏற்படுவதால், எப்படியாவது ஊருக்கு சென்று விட வேண்டும். பஸ்சில் இடம் கிடைத்தால் போதும் என்ற நிர்ப்பந்தத்துக்கு பயணிகள் தள்ளப்படுகின்றனர்.

மக்களின் இந்த இக்கட்டான சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர். எனவே வழக்கமான நாட்களை காட்டிலும் பண்டிகை, விழா காலங்களின்போது 'டிக்கெட்' கட்டணம் பயணிகளை பதற வைக்கும் வகையில் உயர்த்தப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

தற்போது ஆயுதபூஜை, தீபாவளி போன்ற முக்கிய பண்டிகைகள் நெருங்கி வருகிறது. இந்த பண்டிகைகளுக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்டது. காத்திருப்போர் பட்டியலும் நீள்கிறது. எனவே 'தட்கல்' டிக்கெட்டை பலர் எதிர்நோக்கி காத்துள்ளனர். காந்தி ஜெயந்தி (அக்.2-ந்தேதி), ஆயுதபூஜை (அக்.4), விஜயதசமி (அக்.5) என தொடர் அரசு விடுமுறை வருவதால் வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று ஆம்னி பஸ்களில் பயணம் செய்யலாம் என்று எதிர்பார்த்து 'டிக்கெட்' முன்பதிவு செய்ய திட்டமிட்டுள்ள பயணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் கட்டணம் 2 மடங்கிற்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது.

இதை தடுக்கும் விதமாக, ஆம்னி பஸ் சங்கத்தின் சார்பில் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.

இது தொடர்பாக சென்னை பெரம்பூரில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் பைசல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அதன் விபரம் வருமாறு :

விழா காலங்களில் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இதை தடுக்கும் விதமாக, ஆம்னி பஸ் சங்கத்தின் சார்பில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

www.aoboa.co.in என்ற இணையதளத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு என பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். அனைத்து வழித்தடங்களுக்கும் உண்டான கட்டண விபரம் எங்களின் இணைய தளத்தில் உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் குறித்து சங்கத்தின் சார்பில் நாங்களே போக்குவரத்து துறைக்கு புகார் தெரிவித்து வருகிறோம்

அதே நேரத்தில் பயணிகளிடம் கூடுதலாக பெறப்பட்ட கட்டணத்தையும் திருப்பி அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணத்தை ஆம்னி பஸ் வசூலிக்கும் பட்சத்தில் புகார் தெரிவிக்கலாம் என கூறினார்.

கட்டணம் நிர்ணயம்:

மதுரைக்கு ரூ.690 முதல் ரூ.1940யும், திருநெல்வேலிக்கு ரூ.870 முதல் ரூ.2,530யும், திருச்சிக்கு ரூ.520 முதல் ரூ.1,470யும், கோவைக்கு ரூ.720 முதல் ரூ.2090யும் நிர்ணயம் செய்துள்ளது.

இதனிடையே தீபாவளி பண்டிகைக்கான அரசு பேருந்து முன்பதிவுகளும் தொடங்கியுள்ளன. அக்டோபர் 21ம் தேதி பயணிக்க திட்டமிடுவோர் இணையதளத்தில் இன்று முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.பயணிகளிடம் கூடுதலாக பெறப்பட்ட கட்டணத்தையும் திருப்பி அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.


Next Story