குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு; குறைதீர்க்கும் கூட்டத்தில் மேயர் பி.எம்.சரவணன் தகவல்


குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு; குறைதீர்க்கும் கூட்டத்தில் மேயர் பி.எம்.சரவணன் தகவல்
x

நெல்லை மாநகராட்சி பகுதியில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மேயர் பி.எம்.சரவணன் கூறினார்.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி பகுதியில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மேயர் பி.எம்.சரவணன் கூறினார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

நெல்லை டவுன் பாட்டப்பத்து ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் நெல்லை அபுபக்கர் கொடுத்த மனுவில், டவுன் பாட்டப்பத்து ஜூம்மா பள்ளிவாசலுக்கு சொந்தமான மைய வாடி பகுதியில் புதிய சாலை மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மின்விளக்குகள் பொருத்தப்படாததால் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே அங்கு புதிய மின்கம்பங்கள் அமைத்து மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதிகாரிகளிடம் விசாரணை

பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் சீனிவாசன்நகர் பகுதியை சேர்ந்த கந்தசாமி கொடுத்த மனுவில், பாளையங்கோட்டை சீனிவாசகம் நகர் ஏ காலனி 4-வது தெருவில் குறிப்பிட்ட சில வீடுகளில் மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுவதால் எங்களை போன்றவருக்கு குடிநீர் கிடைக்கவில்லை. எனவே அந்த பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன், இந்து மக்கள் கட்சி உடையார், சமூக ஆர்வலர் பெர்டின்ராயன் மற்றும் பொதுமக்கள் மாநகராட்சிக்கு வந்து கொடுத்த மனுவில், நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ள 4 ரத வீதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை அழகுப்படுத்தும் விதமாக கடந்த 2019-ம் ஆண்டு ரூ.14.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அறிக்கையில் 4 ரத வீதிகளிலும் ரூ.65 லட்சம் வரையிலும் பணிகள் நடைபெற்றுள்ளதாகவும், அந்த தொகை ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. பணிகள் நடைபெறாத பட்சத்தில் இவ்வளவு தொகை எவ்வாறு வழங்கப்பட்டது என்பது குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.

வக்கீல்கள் தமிழ் புலிகள் நிர்வாகி மாடத்தி, வக்கீல்கள் பாலாஜி கிருஷ்ணசாமி, சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் மாநகராட்சிக்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், தச்சநல்லூர் உலக அம்மன் கோவில் தெருவில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு என்று வீடுகளை இடிப்பதற்கு நோட்டீஸ் கொடுத்துள்ளார்கள். வீடுகள் இடித்தால் அந்த வீட்டில் உள்ளவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். எனவே அந்த வீடுகளை இடிக்கக்கூடாது என்று கூறியுள்ளனர்.

ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு

இதைத்தொடர்ந்து மேயர் பி.எம்.சரவணன் கூறுகையில், "நெல்லை மாநகராட்சி பகுதியில் கோடை காலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு தண்ணீர் எடுக்கும் உறை கிணறுகளை சுற்றி மணல் மூட்டைகள் அடுக்கி தண்ணீர் சேமித்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.


Next Story