தமிழகத்தில் மீனவர் மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு - மத்தியமந்திரி பர்ஷோத்தம் ரூபாலா


தமிழகத்தில் மீனவர் மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு - மத்தியமந்திரி பர்ஷோத்தம் ரூபாலா
x

தமிழகத்தில் மீனவர்களின் மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று மத்திய மீன்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா கூறினார்.

திருநெல்வேலி

திசையன்விளை:

இந்தியா முழுவதும் மீனவர்களின் குறைகளை அறிந்து நிவர்த்தி செய்யும் வகையில், 'சாகர் பரிக்ரமா' என்ற பயணத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதன்படி, மத்திய மீன்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா, மத்திய இணை மந்திரி எல்.முருகன் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர், குஜராத் மாநிலத்தில் தொடங்கி பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று மீனவர்களிடம் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக நேற்று நெல்லை மாவட்டத்துக்கு வந்த மத்திய மந்திரிகள் அடங்கிய குழுவினர், உவரியில் மீனவர்களிடம் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தனர். தொடர்ந்து மீனவர்களுக்கு நல அட்டைகளை வழங்கினர். பின்னர் மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா பேசியதாவது:-

மீனவர்களின் நலனில் அக்கறை கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தனி அமைச்சகத்தை ஏற்படுத்தி உள்ளார். விவசாயிகளுக்கு கிஷான் அட்டை வழங்கப்படுவது போன்று மீனவர்களுக்கும் கடனுதவி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் நல அட்டை வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் மீனவர்களின் மேம்பாட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளது. நெல்லை மாவட்டத்தில் மீனவ பெண்களுக்கு மத்திய அரசு ரூ.5 கோடி கடனுதவி வழங்கி உள்ளது. இப்பகுதி மீனவர்களின் கோரிக்கைகளான தூண்டில் வளைவு, மீன்களை பாதுகாக்கும் குளிர்பதன அறை, ஆழ்கடல் மீன்பிடி வசதி போன்றவற்றை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேசுகையில், ''நாடு முழுவதும் கடற்கரை பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளான மீன்பிடி துறைமுகம், சாலை வசதி போன்றவற்றை மேம்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி தனிகவனம் செலுத்தி வருகிறார். இதற்காக மீன்வள யோஜனா திட்டத்தில் ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மீன்வளத்துறைக்காக கடந்த 9 ஆண்டுகளில் ரூ.38 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மீனவர்களின் பங்கு 8 சதவீதமாக உயர்ந்துள்ளது'' என்றார்.

முன்னதாக உவரிக்கு வந்த மத்திய மந்திரிகளை வரவேற்கும் விதமாக, மீனவர்கள் பாரம்பரிய களியல் ஆட்டம் ஆடி வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம், முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, பா.ஜ.க. மாவட்ட பொருளாளர் செட்டிகுளம் பாலகிருஷ்ணன் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story