தமிழகத்தில் குழந்தைகள் வளர்ச்சி, ஊட்டச்சத்து திட்டங்களுக்கு ரூ.7.34 கோடி ஒதுக்கீடு - அரசாணை வெளியீடு


தமிழகத்தில் குழந்தைகள் வளர்ச்சி, ஊட்டச்சத்து திட்டங்களுக்கு ரூ.7.34 கோடி ஒதுக்கீடு - அரசாணை வெளியீடு
x

குழந்தைகள் வளர்ச்சி, ஊட்டச்சத்து உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.7.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

"தமிழக சட்டசபையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மானிய கோரிக்கையின்போது 21.4.2022 அன்று அமைச்சர் பி.கீதாஜீவன் வெளியிட்ட அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. குழந்தைகளின் வளர்ச்சி, ஊட்டச்சத்து, சுகாதாரம் ஆகியவற்றில் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதிசெய்வதற்காக அமைச்சர் கீதா ஜீவன் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

அந்த வகையில், எடை குறைவுடன் பிறக்கும் குழந்தைகளை கண்காணிக்க ரூ.85 லட்சம் செலவில் ஆயிரம் மின்னணு தொழில்நுட்ப வளர்ச்சிக் கண்காணிப்பு கருவிகள் வழங்கப்படும். ரத்த சோகையைத் தடுக்க 19 மாவட்டங்களில் தன் சுத்தம், குடற்புழு நீக்கம், கை கழுவுதல் உள்ளிட்ட விரிவான தீவிர விழிப்புணர்வு இயக்கம் ரூ.4.75 கோடி செலவினத்தில் நடத்தப்படும். மகப்பேறு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட மையங்களில், குழந்தைகளின் முதல் ஆயிரம் நாட்கள் குறித்த விழிப்புணர்வு ரூ.1.74 கோடி செலவினத்தில் ஏற்படுத்தப்படும் ஆகிய 3 அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்த அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் மொத்தம் ரூ.7.34 கோடியை நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அரசாணைகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் வெளியிட்டுள்ளார்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story