அத்தியாவசிய பணிகள் செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு
திருப்பத்தூர் பகுதியில் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றியக்குழு கூட்டத்தில் தலைவர் விஜயா அருணாச்சலம் தெரிவித்தார்.
ரூ.2 கோடி ஒதுக்கீடு
திருப்பத்தூர் ஒன்றியக்குழு கூட்டம், ஒன்றியக்குழு தலைவர் விஜயா அருணாச்சலம் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் டி.ஆர்.ஞானசேகரன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் கே.கருணாநிதி வரவேற்றார்.
கூட்டத்தில் தலைவர் விஜயா அருணாச்சலம் பேசுகையில் ஒன்றிய கவுன்சிலர்கள் தங்களது பகுதிகளில் பேவர் பிளாக் சாலை, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் செய்ய தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.2 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் தங்களது பகுதிகளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து உடனடியாக எழுதிக்கொடுக்க வேண்டும் என்றார்.
மேம்பாலம்
துணைத்தலைவர் டி.ஆர்.ஞானசேகரன்:- அனைவரும் தங்களுக்கு தேவையான பணிகள் குறித்து உடனடியாக தெரியப்படுத்தினால் டெண்டர் வைத்து பணிகளை மேற்கொள்ளலாம்.
டாக்டர் திருப்பதி (அ.தி.மு.க.):- கொடுமாம்பள்ளி ஆற்றை கடந்து சுடுகாட்டுக்கு செல்ல மேம்பாலம் கட்டும் பணியை உடனடியாக முடித்துத்தர வேண்டும்.
எம்.ஜி.காந்தி (தி.மு.க.):- மாநகராட்சி மற்றும் நகராட்சி கவுன்சிலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதகு போல ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் வழங்க வேண்டும். இதுகுறித்து தமிழக அரசுக்கு தீர்மானம் போட்டு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது. முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் நன்றி கூறினார்.