உயிரி எரிவாயு கலன் அமைக்கும் பணியினை மேற்கொள்ள ரூ.288.51 கோடி ஒதுக்கீடு - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு
6 மாநகராட்சிகளில், செறிவூட்டப்பட்ட உயிரி எரிவாயு கலன் அமைக்கப்பட உள்ளது.
சென்னை,
உயிரி எரிவாயு கலன் அமைக்கும் பணியினை மேற்கொள்ள ரூ.288.51 கோடி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,
தூய்மை இந்தியா திட்டத்தின் (ந) தொடர்ச்சியாக, நீடித்த நிலையான தூய்மைப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள ஏதுவாக 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 1-ம் நாள் தூய்மை இந்தியா திட்டம்(ந)2.0 தொடங்கப்பட்டது.
அனைத்து நகரங்களையும் குப்பைகள் இல்லாத நகரங்களாகவும் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நகரங்களாகவும் மாற்றுவதே தூய்மை இந்தியா திட்டத்தின் முதன்மையான நோக்கங்கள் ஆகும்.
திடக்கழிவு மேலாண்மை - செறிவூட்டப்பட்ட உயிரி எரிவாயு கலன் (Blo CNG) நகராட்சி திடக்கழிவுகளை கையாளுவதற்கு தகுந்த தொழில்நுட்பங்களின் ஒன்றான செறிவூட்டி அழுத்தப்பட்டு உருளைகளில் உயிர்-வாயு அடைக்கப்பட்டு பயன்படுத்த வகையிலான ஆலைகளை அமைத்து பராமரிக்க வேண்டியுள்ளது. மேலும், மாநகராட்சிகளில் ஈரமான கழிவுகளை கையாளும் திறனை மேம்படுத்துவதுடன், உயிரி எரிவாயுவை தினசரி உற்பத்தி செய்தும் பயன்படுத்துவதும் ஆலையின் முக்கிய நோக்கமாகும்.
9 மாநகராட்சிகளில் செறிவூட்டப்பட்ட உயிரி எரிவாயு கலன்கள் அமைக்கும் செயல் திட்டத்திற்கு, 2023-2024 சட்டமன்ற மானிய கோரிக்கையின் போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது.
மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பூர், தஞ்சாவூர், நாகர்கோவில் மற்றும் தாம்பரம் ஆகிய 9 மாநகராட்சிகளில், உயிரி எரிவாயு தயாரிக்க, பொது -தனியார் பங்களிப்புடன் தினமும் 930 MT திறன் கொண்ட புதிய Bio CNG ஆலைகள் அமைக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து, மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருச்சிராப்பள்ளி, நாகர்கோவில் மற்றும் தாம்பரம் ஆகிய 6 மாநகராட்சிகளில், தனியார் பங்களிப்புடன் (Public Private Partnership) செறிவூட்டப்பட்ட உயிரி எரிவாயு கலன் அமைக்கும் பணியினை ரூ.288.51 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி அளித்து முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். என தெரிவிக்கப்பட்டுள்ளது .