ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்கு ரூ.173 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு உத்தரவு


ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்கு ரூ.173 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு உத்தரவு
x

தூத்துக்குடி, வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்கு ரூ.173 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மற்றும் வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு, கடந்த டிசம்பர் 12-ந் தேதி முதல் 29-ந் தேதிவரை நிர்வாகம், அலுவலக செலவினங்களுக்காக ரூ.87.75 கோடி நிதியை ஒதுக்கியது.

அந்த திட்டத்திற்காக ஏற்கனவே மத்திய அரசு ரூ.943.25 கோடியும், மாநில அரசு ரூ.912.02 கோடியும் என ரூ.1855.27 கோடியை தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்துக்கு (டுபிட்கோ) வழங்கியுள்ளன.

இந்த நிலையில் மத்திய அரசு கடந்த டிசம்பரில் விடுவித்த தொகையுடன் , மாநில அரசின் நிதியையும் சேர்த்து ரூ.173.25 கோடியை விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசை ஸ்மார்ட் சிட்டி திட்ட இயக்குனர், டுபிட்கோ தலைவர் ஆகியோர் கேட்டுக் கொண்டனர்.

அதன்படி இந்த ஆண்டில் தூத்துக்குடி, வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்காக ரூ.173.25 கோடி நிதியை ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story