நெல்லை கல்குவாரியில் சிக்கிய மேலும் ஒரு வாலிபர் உடல் மீட்பு 9 நாட்கள் நடந்த மீட்புப்பணி முடிந்தது

நெல்லை கல்குவாரியில் சிக்கிய மேலும் ஒரு வாலிபரின் உடல் நேற்று மீட்கப்பட்டது
நெல்லை:
நெல்லை கல்குவாரியில் சிக்கிய மேலும் ஒரு வாலிபரின் உடல் நேற்று மீட்கப்பட்டது.
கல்குவாரி விபத்து
நெல்லை அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் கடந்த 14-ந் தேதி ராட்சத பாறைகள் சரிந்து விழுந்தன. அப்போது அங்கு பணியில் இருந்த நாங்குநேரி அருகே காக்கைகுளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 30), தச்சநல்லூர் ஊருடையான்குடியிருப்பை சேர்ந்த ராஜேந்திரன் (35) இளையநயினார்குளத்தைச் சேர்ந்த செல்வம் (27), விட்டிலாபுரத்தைச் சேர்ந்த முருகன் (40), நாட்டார்குளம் பகுதியைச் சேர்ந்த விஜய் (27), ஆயன்குளத்தைச் சேர்ந்த மற்றொரு முருகன் (23) ஆகிய 6 பேர் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
இதில் முருகன், விஜய் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டனர். செல்வம், ஆயன்குளம் முருகன், செல்வகுமார் ஆகியோர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
9-வது நாளாக மீட்பு பணி
பாறை இடிபாடுகளில் சிக்கியிருந்த கடைசி நபரான ராஜேந்திரனை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். பாறைகளை வெடிவைத்து தகர்த்து, அங்கு குவிந்து கிடந்த கற்களை அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில் நேற்று 9-வது நாளாக மீட்பு பணி நடைபெற்றது. கல்குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றினர். தொடர்ந்து அங்கிருந்த பாறைகளுக்கு வெடி வைத்து வெடிக்க செய்தனர். மதியம் 1.40 மணியளவில் பயங்கர சத்தத்துடன் பாறைகள் வெடித்து சிதறின. தொடர்ந்து கற்குவியலை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்றது.
உடல் மீட்பு
கற்குவியலின் அடியில் சிக்கியிருந்த லாரிக்குள் டிரைவரின் இருக்கையில் ராஜேந்திரன் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து நவீன எந்திரங்கள் மூலம் லாரியை வெட்டினர். தொடர்ந்து இரவு 9 மணியளவில் ராஜேந்திரனின் உடலை பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கல்குவாரி விபத்தில் சிக்கிய கடைசி நபரின் உடலும் மீட்கப்பட்டதை தொடர்ந்து 9 நாட்களாக நடந்த மீட்பு பணி நிறைவு பெற்றது.