மாற்று இடம் வழங்க வேண்டும்
காகிதப்பட்டறையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டதால் வீடுகளை இழந்த எங்களுக்கு மாற்று இடமோ, வீடோ வழங்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
குறைதீர்வு கூட்டம்
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் தனஞ்செயன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், முதியோர் உதவித்தொகை, இலவச வீடு, வீட்டுமனை பட்டா, கடனுதவி உள்ளிட்டவை தொடர்பாக 371 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
மாற்று இடம்
கூட்டத்தில் வேலூர் காகிதப்பட்டறையை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், நாங்கள் 18 குடும்பத்தினர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக காகிதப்பட்டறை பகுதியில் ஆற்காடு சாலையோரம் வீடு கட்டி வசித்து வந்தோம். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எங்கள் வீட்டை இடித்து அகற்றி விட்டனர். அதனால் தற்போது குழந்தைகளுடன் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து வருகிறோம். எங்களுக்கு வேறு வீடோ, இடமோ கிடையாது. எனவே எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் மாற்று இடம் அல்லது வீடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
பா.ம.க. வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நகர செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், குடியாத்தம் கவுண்டன்ய மகாநதியில் இருந்து மணல் கடத்தப்படுகிறது. இதில் ஈடுபடும் நபர்கள் மீதும், கடத்தலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடத்தப்பட்ட மணல் குவிக்கப்பட்ட இடத்தில் அதிகாரிகள் ஆய்வுசெய்து அதனை மதிப்பீடு செய்து பணத்தை வசூலித்து அரசு கணக்கில் சேர்க்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
வீட்டுமனை பட்டா
இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேலூர் மாவட்டக்குழு சார்பில் அளித்த மனுவில், பாலமதி ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் அரசு அனுமதித்த அளவை விட அதிகமாக மண் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை ஆய்வு செய்து அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
காட்பாடியை அடுத்த தொண்டான்துளசி காந்திநகர் மக்கள் அளித்த மனுவில், நாங்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஓடைபுறம்போக்கு இடத்தில் குடிசை வீட்டில் வசித்து வருகிறோம். எங்களுக்கு மாற்றுஇடத்தில் இலவசவீடு அல்லது வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இடம் வழங்க கோரிக்கை...
பேரணாம்பட்டு தாலுகா செர்லப்பள்ளி கிராமமக்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் வசிக்கும் 69 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கடந்த 1996-ம் ஆண்டு வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை வீட்டுமனை எங்கு உள்ளது என்று அரசு அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. வீட்டுமனை பட்டா படி அளவீடு செய்து இடம் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
வேலூரை அடுத்த தெள்ளை கிராமத்தை சேர்ந்த வெண்ணிலா அளித்த மனுவில், எனது கணவர் ராம்குமார் கடந்த மாதம் 15-ந் தேதி குருமலையில் உள்ள கோவில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு மறுநாள் வீடு திரும்பினார். அப்போது போலீசார் அவரை நிறுத்தி விசாரணைக்காக அழைத்து சென்று பொய்வழக்கு போட்டுள்ளனர். மேலும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போவதாக கூறுகின்றனர். எனவே எனது கணவரை மீட்டுத்தர வேண்டும் என்று கூறியிருந்தார்.
இலவச பஸ்பாஸ்
கூட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வயது முதிர்ந்த 12 தமிழ் அறிஞர்களுக்கு இலவச பஸ்பாஸ், முதுகு தண்டுவட நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு ரூ.85,800 மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் ஆகியவற்றை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வழங்கினார்.