அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டப்பயனாளிகள் தேர்வுக்குழு கூட்டம்
விழுப்புரத்தில் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டப்பயனாளிகள் தேர்வுக்குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டப்பயனாளிகள் தேர்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ் சுயதொழில் மேற்கொள்ளும் பொருட்டு எம்.எஸ்.எம்.இ.இணையதளத்தில் சுயதொழில் தொடங்குவதற்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது.
வங்கிக்கடன் வழங்க பரிந்துரை
இத்திட்டத்தின்கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.4 கோடி வரை வங்கிக்கடன் வழங்கப்படும். இதில் 35 சதவீத மானியம் அரசால் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 24 ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள், இத்திட்டத்தின்கீழ் சுயதொழில் மேற்கொள்ள வங்கிக்கடன் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களுக்கான நேர்காணல் நடத்தப்பட்டது.
இதில் விண்ணப்பதாரர்கள், தொழில் தொடங்க உள்ள தொழில் விவரம், கல்வித்தகுதி, தொழில் முன்னுரிமை, மற்றும் தொழில் சான்றுகள் போன்றவை குறித்து கேட்டறியப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு வங்கிக்கடன் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்வின்போது மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் அருள் உள்பட பலர் உடனிருந்தனர்.