கடந்த ஆண்டு 108 ஆம்புலன்சில் 57 பிரசவங்கள் நடந்துள்ளன
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்சில் 57 பிரசவங்கள் நடந்துள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்சில் 57 பிரசவங்கள் நடந்துள்ளன.
108 ஆம்புலன்ஸ்
ஈரோடு மாவட்டம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மொத்தம் 44 உள்ளது. இதில் கோபி, ஈரோடு அரசு ஆஸ்பத்திரிகளில் மினி ஐ.சி.யு. என்று அழைக்கப்படும் அதிநவீன வசதிகள் கொண்ட குழந்தைகளுக்கு என்று தனியாக இரண்டு 108 ஆம்புலன்ஸ்கள் உயர் ரக மருத்துவ குழுவினருடன் தயாராக உள்ளது. இதைப்போல் மூன்று 108 வாகனங்கள் செயற்கை சுவாச வசதியுடன் ஈரோடு, பெருந்துறை, கோபி ஆகிய ஆஸ்பத்திரிகளில் தயாராக உள்ளது.
மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடும் நோயாளிகளை காப்பாற்றுவதற்காக இந்த வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு 48 ஆயிரத்து 665 பேரும், கடந்த 2022-ம் ஆண்டு 57 ஆயிரத்து 472 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ உதவிகள் பெற்றுள்ளனர்.
57 பிரசவங்கள்
இதேபோல் கடந்த 2021-ம் ஆண்டு சாலை விபத்தில் சிக்கிய 8 ஆயிரத்து 587 பேரும், கடந்த 2022-ம் ஆண்டு 10 ஆயிரத்து 839 பேரும் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி உள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு 10 ஆயிரத்து 430 கர்ப்பிணிகளும், கடந்த 2022-ம் ஆண்டு 16 ஆயிரத்து 800 கர்ப்பிணிகளும் பிரசவத்திற்காக 108 ஆம்புலன்சில் பயணித்து உள்ளனர்.
இதில் கடந்த 2021-ம் ஆண்டு 41 பிரசவமும், 2022-ம் ஆண்டு 57 பிரசவமும் 108 ஆம்புலன்சில் நடந்துள்ளது. மாவட்ட முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது. மலை பகுதிகளில் உள்ள கிராம மக்கள் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தால் 14 நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு வந்து விடும். இதேபோல் நகர பகுதியில் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தால் 8 நிமிடத்திற்குள் வந்துவிடுகிறது.