பாதி வழியில் இறக்கி விட்ட ஆம்புலன்ஸ்: குழந்தையின் சடலத்தை 10 கி.மீ. கண்ணீரோடு சுமந்தே சென்ற பெற்றோர்..!


பாதி வழியில் இறக்கி விட்ட ஆம்புலன்ஸ்: குழந்தையின் சடலத்தை 10 கி.மீ. கண்ணீரோடு சுமந்தே சென்ற பெற்றோர்..!
x

அணைக்கட்டு அருகே குழந்தையின் சடலத்தை 10 கிலோ மீட்டர் தூரம் பெற்றோர் கையால் தூக்கிச் சென்ற சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர்,

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, அல்லேரி மலைகிராமத்திற்கு உட்பட்ட அத்திமரத்து கொல்லை கிராமத்தில் வசித்து வரும் கூலித் தொழிலாளி விஜி- பிரியா தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை தனுஷ்காவை, வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் முன்பு உறங்கிக் கொண்டிருந்தபோது நல்ல பாம்பு கடித்துள்ளது.

இதையடுத்து குழந்தையை அணைக்கட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சாலை வசதி இல்லாததால் மருத்துவமனைக்கு செல்ல நீண்ட நேரமானதால், பாதி வழியிலேயே குழந்தை உயிரிழந்தது. தகவலறிந்த அணைக்கட்டு போலீசார், குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு குழந்தையின் உடலை வீட்டுக்கு எடுத்து சென்றபோது, சாலை வசதி இல்லாததால் பாதி வழியில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து இறக்கி விட்டனர். இதனையடுத்து சிறிது தூரம் இருசக்கர வாகனத்தில் சென்று, பின்னர் கால்நடையாக சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பெற்றோர் குழந்தையின் சடலத்தை தூக்கி சென்றனர். சாலை வசதி இருந்திருந்தால், குழந்தையை காப்பாற்றி இருக்க முடியும் என்று உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சாலை வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





Next Story