பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு: பரணம் கிராமத்தில் நடைபெற இருந்த போராட்டம் ரத்து


பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு: பரணம் கிராமத்தில் நடைபெற இருந்த போராட்டம் ரத்து
x

பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்பட்டதால் பரணம் கிராமத்தில் நடைபெற இருந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பரணம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 850-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 3 அடுக்கு பள்ளி கட்டிடம் கட்ட ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில் இதுவரை கட்டப்படவில்லை. அதேபோன்று இந்த கிராமத்தில் உள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புகளையும் அகற்றவில்லை. பள்ளிக்கு வரும் மாணவர்கள் பயன்படுத்தும் பிலாக்குறிச்சி சாலை, தத்தனூர் செல்லும் சாலை, கழுமங்கலம் செல்லும் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. இவைகளை சரி செய்ய வேண்டும் என்று பரணம் கிராம மக்கள் அனைத்து துறை அதிகாரிகளிடமும் பல்வேறு மனுக்களை அளித்து இருந்தனர். ஆனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் இன்று (வியாழக்கிழமை) 5-க்கும மேற்பட்ட கிராமங்களை திரட்டி உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவின் பேரில் உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. பரிமளம் தலைமையில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. முடிவில் அனைத்து துறை அதிகாரிகளும் விரைந்து கிராம மக்கள் விடுத்துள்ள கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு காணப்பட்டதால் பரணம் கிராமத்தில் இன்று நடைபெற இருந்த போராட்டம் ரத்து செய்யப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.


Next Story