அமித்ஷாவுக்கு தமிழ்நாட்டின் வரலாறு தெரியவில்லை; தி.மு.க. பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேச்சு


அமித்ஷாவுக்கு தமிழ்நாட்டின் வரலாறு தெரியவில்லை; தி.மு.க. பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேச்சு
x
தினத்தந்தி 12 Jun 2023 6:58 PM GMT (Updated: 13 Jun 2023 9:56 AM GMT)

அமித்ஷாவுக்கு தமிழ்நாட்டின் வரலாறு தெரியவில்லை என்று தி.மு.க. பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசினார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் தேரடி திடலில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிபாஸ்கர் வரவேற்றார். இதில் கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பிரபாகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை கருணாநிதி வழியில் செயல்படுத்தி தமிழகத்தை நம்பர் ஒன் மாநிலம் ஆக்க செயல்பட்டு வருகிறார். இவரை பார்த்து மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் புதிய திட்டங்களை கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழக முதல்-அமைச்சர் திகழ்கிறார். மற்ற மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை வீட்டிற்கு அனுப்புவதற்கு முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதைக்கண்டு பீதியடைந்த பா.ஜ.க., முதல்-அமைச்சர் குறித்து தரமற்ற குற்றச்சாட்டுகள், விமர்சனங்களை வைத்து வருகிறது. மத்திய மந்திரி அமித்ஷாவும் தேவையற்ற விமர்சனங்களை தெரிவித்துள்ளார், என்றார்.

ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், தி.மு.க.வால் தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளது. 10 ஆண்டு கால ஆட்சியில் அ.தி.மு.க. தமிழகத்தில் ஒன்றும் செய்யவில்லை. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மக்கள் எண்ணி பார்க்க வேண்டும். சாதியை படிப்பின் மூலம் முறியடிக்க வைத்தவர் கருணாநிதி. பிரதமர் மோடியும், மத்திய மந்திரி அமித்ஷாவும் 9 ஆண்டு காலம் பொய் சொல்லி ஆட்சி செய்துள்ளனர். பெருந்தலைவர் காமராஜர், ஜி.கே.மூப்பனார் ஆகியோரை பிரதமராக்குவதை தி.மு.க. தடுத்து விட்டது என்று பச்சை பொய்யை அமித்ஷா கூறியுள்ளார். காமராஜரை முதன்முதலில் அடையாளப்படுத்தியது தி.மு.க. தான். அமித்ஷாவுக்கு தமிழ்நாட்டின் வரலாறும், இந்திய நாட்டின் வரலாறும் தெரியாது. காமராஜர் உயிருடன் இருக்கும்போது, அவருக்கு தி.மு.க. சிலை வைத்தது. காமராஜரை கொலை செய்ய முயற்சித்தது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. காமராஜர் பிரதமர் பதவியை விரும்பவில்லை. காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தது தி.மு.க. ஆட்சியில் தான். பிரதமர் மோடிக்கு கவுண்ட்டவுன் தொடங்கி விட்டது, என்றார்.


Next Story