அண்ணாமலை நடைபயணத்தை அமித்ஷா தொடங்கி வைக்கிறார்


பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, ராமேசுவரத்தில் நாளை நடைபயணம் தொடங்குகிறார். இதை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கிறார்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,


பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, ராமேசுவரத்தில் நாளை நடைபயணம் தொடங்குகிறார். இதை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கிறார்.

அண்ணாமலை நடைபயணம்

'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ராமேசுவரத்தில் இருந்து நாளை(வெள்ளிக்கிழமை) நடைபயணம் தொடங்குகிறார். இதற்கான தொடக்க விழா, ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே உள்ள திடலில் நடைபெறுகிறது.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு, அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைத்து பேசுகிறார். இந்த நிகழ்ச்சிக்காக அமித்ஷா டெல்லியில் இருந்து விமானத்தில் நாளை 4.50 மணிக்கு மதுரை வருகிறார். பின்னர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு, பிற்பகல் 5 மணிக்கு மண்டபம் ஹெலிகாப்டர் தளத்தில் வந்திறங்குகிறார். அங்கிருந்து காரில் ராமேசுவரம் செல்லும் அவர் அங்குள்ள தனியார் ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். பின்னர் மாலை 5.45 மணி அளவில் விழா நடைபெறும் இடத்திற்கு வந்து கலந்துகொள்கிறார். முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

விழாவுக்கு பின்னர் தனியார் ஓட்டலில் அமித்ஷா ஓய்வெடுக்கிறார். பின்னர் ராமேசுவரம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். இரவில் ராமேசுவரத்தில் தங்குகிறார். மறுநாள் காலை ராமேசுவரம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். அதன்பிறகு காலை 11 மணிக்கு மற்றொரு தனியார் தங்கும் விடுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் புத்தக வெளியீட்டு விழா நிகழ்வில் பங்கேற்கிறார். அதன்பிறகு அப்துல்கலாமின் இல்லத்திற்கு சென்று அப்துல்கலாமின் அருங்காட்சியகத்தை பார்த்து விட்டு குடும்ப உறுப்பினர்களை சந்திக்கிறார். அதன்பிறகு பகல் 12.40 மணிக்கு குந்துகாலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்கிறார்.

அங்கிருந்து மண்டபம் வரும் அவர் தனி ஹெலிகாப்டர் மூலம் மதுரை புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து தனி விமானம் மூலம் பிற்பகல் 2.15 மணியளவில் டெல்லி புறப்பட்டு செல்கிறார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கிடையே நடைபயணம் தொடங்கியதும் ராமேசுவரம் நகருக்குள் சென்று பொதுமக்களை சந்தித்து அண்ணாமலை குறைகளை கேட்கிறார். அண்ணாமலையும் இரவில் ராமேசுவரத்தில் தங்குகிறார்.

மக்களை சந்திக்கிறார் அண்ணாமலை

நாளை மறுநாள் (29-ந்தேதி) காலை ராமேசுவரத்தில் இருந்து நடைபயணமாக புறப்பட்டு தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் மக்களை சந்திக்கிறார். தொடர்ந்து ராமநாதபுரம் செல்கிறார். மாலை ராமநாதபுரம் நகரில் நடைபயணம் சென்று பொதுமக்களை சந்திக்கிறார். அன்று இரவு ராமநாதபுரத்திலேயே தங்குகிறார்.

வருகிற 30-ந்தேதி அன்று காலை முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும், பிற்பகலில் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கும் செல்கிறார். அன்று இரவு பரமக்குடியில் தங்குகிறார்.

திருவாடானை

31-ந்தேதி அன்று காலை பரமக்குடியில் இருந்து புறப்பட்டு திருவாடானை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டபடி சிவகங்கை மாவட்டத்துக்கு செல்கிறார்.

நடைபயண தொடக்க விழாவுக்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி நேற்று மும்முரமாக நடைபெற்றது.

ராமேசுவரம் பஸ்நிலையத்தில் இருந்து பாம்பன் பாலம் வரை சாலையின் இருபுறமும் பா.ஜனதா கொடிகள் கட்டப்பட்டு வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா மேடையானது நாடாளுமன்றத்தை போன்று அமைக்கப்பட்டு வருகிறது.

பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட பார்வையாளர் முரளிதரன், மாவட்ட தலைவர் தரணி முருகேசன் ஆகியோர் நேற்று விழா ஏற்பாடுகளை பார்வையிட்டனர். அப்போது, கட்சியின் நகர் தலைவர் ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகர் பொருளாளர் சுரேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story