அப்துல்கலாமுக்கு அமித்ஷா புகழாரம்


அப்துல்கலாமுக்கு அமித்ஷா புகழாரம்
x
தினத்தந்தி 30 July 2023 12:15 AM IST (Updated: 30 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

“அப்துல்கலாமின் கனவு தேசத்துக்கு தெளிவான வளர்ச்சி பாதைைய வகுத்து கொடுத்தது” என்று ராமேசுவரத்தில் நேற்று நடந்த விழாவில் அமித்ஷா பேசினார்.

ராமநாதபுரம்

"அப்துல்கலாமின் கனவு தேசத்துக்கு தெளிவான வளர்ச்சி பாதைைய வகுத்து கொடுத்தது" என்று ராமேசுவரத்தில் நேற்று நடந்த விழாவில் அமித்ஷா பேசினார்.

புத்தகம் வெளியீட்டு விழா

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பற்றி எழுதப்பட்ட "அப்துல்கலாம் நினைவுகள் அழியாது" என்ற ஆங்கில பதிப்பு புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சி ராமேசுவரத்தில் நேற்று நடந்தது.

இந்த புத்தகத்தை ஒய்.எஸ்.ராஜன் மற்றும் கலாமின் அண்ணன் மகளான நசீமா மரைக்காயர் ஆகியோர் எழுதி உள்ளனர். அதனை ஆங்கிலத்தில் தற்போது ஸ்ரீபிரியா சீனிவாசன் மொழி பெயர்த்து இருக்கிறார்.

புத்தக வெளியீட்டு விழாவுக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை தாங்கி புத்தகத்தை வெளியிட்டார். கலாம் குடும்பத்தினர் உள்பட பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கலாமுக்கு புகழாரம்

விழாவில் கலாமுக்கு புகழாரம் சூட்டி அமித்ஷா பேசியதாவது:-

மக்கள் ஜனாதிபதியான அப்துல்கலாம் தனது வாழ்நாளை கற்பதற்கும் கற்பிப்பதற்கும் அர்ப்பணித்தார். தனது இறுதி மூச்சினைகூட மேகாலயாவில் கல்லூரியில்தான் சுவாசித்தார். அவரது முகத்தில் எப்போதும் புன்சிரிப்புதான் பூக்கும். அது மாணவர்கள் மத்தியில்தான் மலரும். அவரது புன்சிரிப்பு தேசத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதாக இருந்தது. ஒளி ஊட்டுவதாக இருந்தது.

"உறக்கத்தில் வருவது கனவு அல்ல. உங்களை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு" என்று கலாம் கூறியிருக்கிறார். அவருக்கு "புதிய இந்தியா-2020" என்பதுதான் கனவாக இருந்தது. அவரது இந்த கனவு இந்தியாவுக்கு ஒரு தெளிவான வளர்ச்சி பாதையை வகுத்து கொடுத்தது. அதாவது, இந்தியா ஒரே தேசம். நகரமும், கிராமமும் ஒரே சீரான தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதார வளர்ச்சியை பெற வேண்டும். அப்போதுதான் தேசம் முன்னேறும் என்றும் கூறி இருந்தார்.

கலாமின் இந்த கனவுகளை பிரதமர் மோடி செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார். இந்த புத்தகத்தில் கலாம் தன் வாழ்க்கையில் சந்தித்த துன்பங்கள், இனிமையான நிகழ்வுகள் மிக நேர்மையாக சொல்லப்பட்டு உள்ளன. ஒருசிறிய கிராமத்தில் பிறந்து, உலகமே வியக்கும் வண்ணம் அவர் உயர்ந்தது எப்படி? என்பது பற்றி தெளிவாக சொல்லப்பட்டு உள்ளது.

5 ஏவுகணைகள்

வள்ளுவரின் வாக்குப்படியும், பாரதி கண்ட கனவுப்படியும் அப்துல்கலாம் வாழ்ந்து காட்டி இருக்கிறார். தான் பணியாற்றிய இடங்களில் உயர் அலுவலர்கள் மட்டுமின்றி தனக்கு கீழ் இருக்கும் அனைவரையும் ஒருங்கிணைத்து செயலாற்றினார்.

அப்துல்கலாம் 5 ஏவுகணைகளை செலுத்தி இருக்கிறார். அதற்கு அவர் வைத்த பெயர்கள் பிரித்வி, நாகா, அக்னி, ஆகாஷ் ஆகியவை. இந்த பெயர்களிலேயே நாட்டின் பண்பாடு, மொழி, கலாசாரத்தை நிறுவி இருக்கிறார். இதை வைத்தே அவர் எப்படிப்பட்ட உயர்ந்த மனிதர் என்பதை புரிந்து கொள்ள முடியும். அக்னி ஏவுகணையை சோதனை செய்தபோது பல தடைகள் வந்தன. ஆனால் இந்த தடைகளை தாண்டினார். தனது குழுவினர் சோர்ந்து விடாமல் வழி நடத்தி வெற்றி கண்டார்.

தலைப்பு செய்தியாக...

ஜனாதிபதியாக உயர்ந்த அப்துல்கலாம், எப்போதும் ஏழைகளுக்கும், இயலாதவர்களுக்கும் உதவி செய்வதையே கடமையாக நினைத்து பணியாற்றினார். அவரது வழியை பிரதமர் மோடியும் பின்பற்றி, இந்தியாவின் கடைசி குடிமகன் வரை திட்டங்கள் செல்ல வேண்டும் என்று பணியாற்றி வருகிறார். இது கலாமின் எண்ணத்தை நிறைவேற்றும் செயலாகும். கலாம் சிறுவனாக இருந்தபோது, செய்தித்தாள்களை வீடுகள்தோறும் வினியோகித்து இருக்கிறார். ஆனால் பின்னாளில் அவரே செய்தித்தாளின் தலைப்பு செய்தியாக மாறினார். மீன்பிடி கிராமத்தில் பிறந்த ஒருவர், இந்திய விண்வெளி திட்டங்களை செயல்படுத்தினார்.

இன்றைய நவீன இந்தியாவின் பல விண்வெளி திட்டங்களுக்கு கலாம்தான் முன்னோடி. அவரது திட்டங்கள்தான் நம்மை எல்லாம் முன்னெடுத்து செல்கின்றன. போர் விமானியாக வேண்டும் என்று கலாம் நினைத்தார். ஆனால் முடியவில்லை. ஜனாதிபதியான பின்பு, சுகோய் என்ற போர் விமானத்தை இயக்கினார். அப்போது அவரிடம், நீங்கள் விமானத்தை இயக்கியபோது பயப்படவில்லையா என கேட்டதற்கு? அதனை இயக்குவதிலேயே எனது கவனம் இருந்ததால் பயம் எனக்கு தோன்றவில்லை என்று கூறினார்.

நேர்மையான வாழ்க்கை

கலாம் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர். குஜராத்தில் இருக்கும் ஒரு சாமியாரிடம் அடிக்கடி. பேசுவார். மாபெரும் விஞ்ஞானியாக அவர் இருந்தாலும், அதனை மிஞ்சிய ஆன்மிகம் அவரிடம் இருந்தது. ஜனாதிபதி மாளிகைக்கு அவரது குடும்பத்தினர் 52 பேர் 9 நாட்கள் வந்து தங்கினர். அவர்கள் அரசு விருந்தினர்களாக கருதப்படுவார்கள். ஆனால் கலாம் அதற்குரிய செலவு ரூ.9 லட்சத்து 52 ஆயிரத்தை அரசுக்கு வழங்கி விட்டார். நேர்மையாக வாழ வேண்டும் என்று சொன்னார். அவ்வாறு வாழ்ந்தும் காட்டி இருக்கிறார்.

ஜனாதிபதிகள் வரலாற்றிலேயே 2 சிறிய பெட்டிகளோடு ஜனாதிபதி மாளிகைக்கு வந்து மீண்டும், அதே 2 பெட்டிகளை எடுத்துச்சென்றவர் கலாம் ஒருவர் தான்.

நான் இங்கே விட்டுச்செல்வதற்கு எனக்கு எந்த சொத்தும் இல்லை. வாங்கி கொள்வதற்கு பிள்ளைகளும் இல்லை என்றும் கலாம் கூறியிருக்கிறார். அவரது இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் அவரது பிள்ளைகள் தான். இந்த பிள்ளைகளுக்கு எல்லாம் கலாம்தான் மிகப்பெரிய சொத்து. அவரது வழிகாட்டுதல்படி நாங்கள் எல்லாம் நடப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ரவி பச்சமுத்து, ஏ.சி.சண்முகம், மராட்டிய மாநில எம்.எல்.ஏ. கீதா பரத் ஜெயின், கலாமின் அண்ணன் மகள் நசீமா மரைக்காயர், அண்ணன் மகன் ஜெயினுலாபுதீன், பேரன்கள் சேக்தாவூத், சேக்சலீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விவேகானந்தர் மணிமண்டபம்

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அமித்ஷா, ராமேசுவரத்தில் உள்ள கலாம் இல்லத்திற்கு சென்றார். அங்கு அப்துல்கலாம் பற்றிய அரிய புகைப்படங்களை பார்வையிட்டார். தொடர்ந்து குந்துகால் பகுதியில் உள்ள விவேகானந்தர் மணிமண்டபத்துக்கு சென்றார். விவேகானந்தா வித்யாலயா தாளாளர் சுவாமி நியமனந்தா மற்றும் ராமகிருஷ்ணா மட சுவாமிகள் அச்சரானந்தா சுவாமி, பக்தானந்தா சுவாமி ஆகியோர் அமித்ஷாவையும், மாநில தலைவர் அண்ணாமலையையும் வரவேற்றனர். அங்கு அமித்ஷா மதிய உணவு சாப்பிட்டார். பின்னர் மண்டபம் சென்று ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுரை வந்து, விமானத்தில் டெல்லி சென்றார்.


Next Story