ராமேசுவரம் கோவிலில் அமித்ஷா தரிசனம்
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று தரிசனம் செய்தார். இதனை பெரும் பாக்கியமாக கருதுகிறேன் என பதிவேட்டில் அவர் தனது குறிப்பை எழுதினார்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று தரிசனம் செய்தார். இதனை பெரும் பாக்கியமாக கருதுகிறேன் என பதிவேட்டில் அவர் தனது குறிப்பை எழுதினார்.
சாமி தரிசனம்
"என் மண், என் மக்கள்" என்ற முழக்கத்துடன் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்கிறார். இந்த யாத்திரையை நேற்று முன்தினம் இரவு ராமேசுவரத்தில் நடந்த விழாவில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் ராமேசுவரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினார்.
நேற்று அதிகாலை 5.45 மணிக்கு அமித்ஷா, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். அவரை கோவில் இணை ஆணையர் மாரியப்பன், பொன்னாடை போர்த்தி வரவேற்றார். கோவில் சார்பில் மாலை அணிவித்தும் வரவேற்பு அளிக்்கப்பட்டது.
கோவிலுக்குள் சென்ற அமித்ஷா மீது கோவில் தீர்த்தம் தெளிக்கப்பட்டது. பின்னர் அவர் விநாயகர், சுவாமி, அம்பாள், நடராஜர், மகாலட்சுமி, ஆஞ்சநேயர் சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்தார். அவருடன் மத்திய இணை மந்திரி எல்.முருகன், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, நிர்வாகி சி.டி.ரவி, மாவட்ட பார்வையாளர் முரளிதரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
கோவிலில் தரிசனம் முடிந்து வெளியே வந்தபோது அமித்ஷாவை காண ஏராளமானோர் திரண்டனர். அவர்களை பார்த்து கையசைத்தார்.
பாக்கியமாக கருதுகிறேன்
கோவில் விருந்தினர் பதிவேட்டில் அமித்ஷா குறிப்பெழுதினார். அதில், "ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு வரவேண்டும் என கோடிக்கணக்கான மக்களுக்கு விருப்பம் இருக்கிறது. எனக்கு சுவாமி தரிசனம் செய்ய இன்று வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாக கருதி பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்" என இந்தியில் எழுதி கையெழுத்திட்டு இருந்தார். பின்னர் அவர் காரில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.