அம்மா உணவகங்களில் வித, விதமான உணவுகள் கிடைக்குமா?


அம்மா உணவகங்களில் வித, விதமான உணவுகள் கிடைக்குமா?
x

ஒரே வகையான உணவு வழங்குவதால் சலிப்பாக உள்ளதாகவும், அம்மா உணவகங்களில் வித, விதமான உணவுகள் கிடைக்குமா? எனவும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர்

அம்மா உணவகம் மூடல்

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரப் பகுதிகளில் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம் அம்மா உணவகத் திட்டமாகும்.

இதில் கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டதுடன் புதிய மருத்துவக்கல்லூரி காந்தி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் புற நோயாளிகள் பிரிவு உட்பட ஒரு சில பிரிவுகள் மட்டும் மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வருவதால் இங்கு உள்ள அம்மா உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் வெகுவாக குறைந்ததன் பேரில் இங்குள்ள அம்மா உணவகம் மூடப்பட்டது. இதையடுத்து கரூர் மாவட்டத்தில் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள உழவர் சந்தை மற்றும் குளித்தலைஅரசு மருத்துவமனை அருகில் ஆகிய 2 இடங்களில் மட்டுமே தற்போது அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. இதில் கரூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள உழவர் சந்தை அருகில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் பொருட்கள் வாங்கிக் கொடுத்தல், கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளை நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

காலையில் இட்லி 1 ரூபாய்க்கும், மதியம் சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர்சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உழவர் சந்தைக்கு அருகில் அம்மா உணவகம் உள்ளதால் காலையில் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்துவிட்டு செல்லும் விவசாயிகளும், சிறு வியாபாரிகளும், பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை-எளியவர்கள் பலர் இந்த அம்மா உணவகத்தில் சாப்பிட்டு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். கொரோனா பாதிப்பு ஊரடங்கு காலங்களில் இங்கு சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருந்தது. மேலும் அப்போது 3 வேளைகளிலும் உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில் காலை மற்றும் மாலை வேளையில் சமூக இடைவெளியை கடைபிடித்து நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் உணவு வாங்கி சாப்பிட்டு சென்றதை காண முடிந்தது. தற்போது அம்மா உணவகத்திற்கு ஓரளவு பொதுமக்கள் வந்து சாப்பிட்டு சென்றாலும் அங்கு அமர்ந்து சாப்பிடுவதற்கு நாற்காலி வசதி இல்லை. இதனால் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

லாபத்தை எதிர்பார்க்காமல்

இதுகுறித்து அம்மா உணவகத்தில் பணியாற்றும் பணியாளர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், நாளொன்றுக்கு சுமார் ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை விற்பனை நடைபெற்று வருகிறது. எங்களுக்கு வரும் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை கொண்டு உணவுகளை தயாரித்து விற்று வருகிறோம். மேலும் செலவு அதிகமாக இருப்பதால் பொருட்கள் வாங்கும் அளவும் சற்று குறைவாகவே உள்ளது. இருப்பினும் இருக்கின்ற பொருட்களைக் கொண்டு உணவினை தயாரித்து விற்று வருகிறோம். அம்மா உணவகம் லாபத்தை எதிர்பார்க்காமல் செலவுகள் அதிகம் பிடித்தாலும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இயங்கி வருகிறது. தங்களுக்கு நாளொன்றுக்கு ரூ.250 சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.

வெளி மாவட்டத்தில் இருந்து கரூருக்கு தொழில் ரீதியாக வந்து செல்லும் சின்னகருப்பு என்பவர் கூறுகையில், நான் காரைக்குடியில் இருந்து வாரம் ஒருமுறை கரூருக்கு வந்து இங்கு உள்ள தலையணை உறைகளை வாங்கிச் சென்று அங்கு தைத்து சந்தைகளுக்கு எடுத்துச்சென்று விற்பனை செய்து வருகிறேன். இதனால் கரூருக்கு ஆர்டர் எடுக்க வரும்போது இங்கு உள்ள அம்மா உணவகத்தில் தான் கடந்த சில ஆண்டுகளாக சாப்பிட்டு செல்கிறேன். விலை குறைவாக தருவதுடன் நல்ல தரமான உணவையே வழங்குகின்றனர். இதனால் குறைந்த செலவில் நிறைவான உணவு சாப்பிட்ட சந்தோஷத்தை இந்த அம்மா உணவகம் தருகிறது, என்றார்.

கரூரில் டிரைவராக பணிபுரிந்து வரும் பாண்டி என்பவர் கூறுகையில், டிரைவரான நான், அம்மா உணவகத்தில் தான் சாப்பிடுவது வழக்கம். நம் வீட்டில் சாப்பிடுவது போன்று அம்மா உணவகத்தில் சாப்பிடும் சாப்பாடு நல்ல முறையில் உள்ளது. மேலும் இட்லி, பொங்கல், சாம்பார், தயிர் சாதம் இவற்றுடன் சேர்ந்து சப்பாத்தி, பூரி உள்ளிட்ட உணவு வகைகளையும் சேர்த்து சமைத்து சற்று கூடுதலான விலைக்கு வழங்கினால் அம்மா உணவகத்தில் இன்னும் பலர் வந்து சாப்பிட்டு செல்வார்கள் என்றார்.

பார்சலாக வாங்கி செல்வதும்...

குளித்தலை நகராட்சியில் குளித்தலை அரசு மருத்துவமனை வளாகத்தின் அருகில் அம்மா உணவக கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. குளித்தலை நகராட்சி மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள் தலா 6 பேர் வீதம் 2 குழுவாகப் பிரிந்து காலை மற்றும் மதிய நேரங்களில் மொத்தம் 12 பேர் உணவுகளை சமைத்து விற்பனை செய்து வருகின்றனர். சுழற்சி முறையில் இவர்கள் தங்களது பணி நேரத்தை மாற்றி பணிபுரிந்து வருகின்றனர். காலையில் ஒரு இட்லி ரூ.1-க்கும், பொங்கல் ரூ.5-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மதிய நேரத்தில் சாம்பார் சாதம் ரூ.5-க்கும், தயிர் சாதம் ரூ.3-க்கும் விற்கப்படுகிறது.

இங்கு உணவு சாப்பிட வருபவர்கள் பணம் செலுத்தி டோக்கனை பெற்றுக் கொண்டு அதை அங்கு பணிபுரியும் பணியாளரிடம் கொடுத்து உணவுப் பொருட்களை வாங்கி உண்ணுகின்றனர். ஏழை-எளிய மக்கள் முதல் நடுத்தர மக்கள் போன்றோர் இங்கு வந்து சாப்பிடுகின்றனர். அரசு மருத்துவமனை அருகில் இருப்பதால் நோயாளிகளை பார்ப்பதற்காக வருபவர்கள், அவர்களுடன் தங்கி இருக்கும் உறவினர்கள் உள்பட மருத்துவமனைக்கு வரும் பலரும் இந்த அம்மா உணவகத்தில் காலை, மதியம் உணவருந்தி செல்கின்றனர். அதுமட்டுமில்லாமல் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வெளியூர்களில் இருந்து வியாபாரம் செய்ய வருபவர்கள் என பலதரப்பட்டவர்களும் அம்மா உணவகத்தில் சாப்பிடுகின்றனர். பலர் பாத்திரங்களை எடுத்து வந்து உணவுகளை பார்சலாக வாங்கி செல்வதும் உண்டு.

சுய உதவிக்குழுவினர் பணம் செலுத்தும் நிலை

இங்கு உணவு சமைப்பதற்கான அனைத்து பொருட்களையும் குளித்தலை நகராட்சி நிர்வாகம் வழங்குகிறது. அதுபோல் அம்மா உணவக பணிகளையும் நகராட்சி நிர்வாகம் நிர்வகிக்கிறது. கொரோனா காலகட்டத்தில் அம்மா உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட உணவுகளுடன் வேகவைத்த முட்டைகளும் வினியோகம் செய்யப்பட்டன. மிகக்குறைந்த விலையில் உணவு கிடைப்பதால் வீட்டில் உணவு சமைக்காத நேரங்களில் பொதுமக்கள் இங்கு வந்து பணம் செலுத்தி தங்களுக்கு தேவையான உணவுகளை பாத்திரங்களில் வாங்கிச் செல்கின்றனர். இங்கு பணி செய்யும் சுய உதவிக்குழு பெண்கள் தினந்தோறும் தாங்கள் தயார் செய்யும் உணவுகளை விற்று நகராட்சியில் ரூ.3 ஆயிரத்து 600 செலுத்த வேண்டியுள்ளது. உணவு விற்பனை ஆகாத சில நாட்களில் இங்கு பணிபுரியும் சுய உதவிக்குழு பெண்களே விற்பனை செய்து கிடைத்த தொகையுடன் தங்களது தொகையையும் கூடுதலாக செலுத்தி அன்று நகராட்சியில் கட்ட வேண்டிய பணத்தை கட்டி விடுகின்றனர்.

வித, விதமான உணவுகள்

இந்த அம்மா உணவகத்தில் சாப்பிட வந்த புஷ்பவள்ளி என்பவர் கூறுகையில், நான் இப்பகுதிக்கு வரும்போது அம்மா உணவகத்தில் சாப்பிடுவது வழக்கம். இங்கு வழங்கப்படும் உணவுகள் வீட்டில் சமைத்த உணவு போல சுவையாக இருக்கிறது. அம்மா உணவகத்தில் காலையில் வழங்கப்படும் இட்லி, பொங்கல் தவிர தோசை, வடை போன்றவற்றை கூடுதலாக வழங்கலாம். 2 இட்லிக்கு தேவையான மாவில் தோசையாக ஊற்றிக் கொடுக்கும்போது பொதுமக்களும் விரும்பி வாங்கி உண்பர். காலையில் மினி டிபன் போல ஒரு இட்லி, தோசை, சிறிது பொங்கல் வைத்து குறைந்த விலைக்கு தரலாம். அதுபோல் சாம்பார் சாதம், தயிர் சாதம் என்பதற்கு பதிலாக சாதம் தனியாகவும் சாம்பார், ரசம், பொரியல், அப்பளம் போன்று வழங்கலாம். இதனுடன் வேகவைத்த முட்டையையும் தினசரி வழங்கலாம். ஒரே வகையான உணவை சாப்பிடுவதை விட விதவிதமான உணவுகள் இங்கு கிடைக்கும் என்ற பட்சத்தில் தரமான உணவு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது என்றால் பல்வேறு தரப்பினரும் இங்கு வந்து சாப்பிட வாய்ப்புள்ளது. இதனால் அம்மா உணவகத்திற்கு சற்று வருவாய் கூடவும் வாய்ப்பு உள்ளது, என்றார்.

தரையில் அமர்ந்து...

குளித்தலை பகுதியைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் நவீன்குமார் கூறுகையில், நான் வீட்டில் தினந்தோறும் உணவு உட்கொண்டாலும் நண்பருடன் வெளியே செல்லும்போது அல்லது விளையாடிவிட்டு வரும்போது அம்மா உணவகத்தில் சாப்பிடுவது வழக்கம். இங்கு வழங்கப்படும் உணவுகள் சுவையாக இருக்கிறது. பலதரப்பட்ட மக்களும் இங்கு வந்து உணவு சாப்பிடும் நிலையில் அம்மா உணவகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இங்கு நின்றபடியே உணவருந்த வேண்டிய நிலை இருப்பதால் வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளி போன்றவர்கள் தரையில் அமர்ந்து உணவு உண்கின்றனர். அவர்களைப் போன்றவர்கள் நாற்காலியில் அமர்ந்து உணவு அருந்தும் வகையில் ஏற்பாடு செய்யலாம். அதுபோல இங்கு சில்வர் தட்டுகளில் உணவுகள் வழங்கப்படுகின்றன. இந்த தட்டுகளின் மேல் இலை வைத்து வழங்கினால் இன்னும் சுகாதாரமாக இருக்கும். அம்மா உணவகம் திட்டத்தில் உணவுகளை சுகாதாரமாக வழங்க கூடுதல் கவனம் செலுத்தினால் அம்மா உணவகத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

நிறை, குறைகளை பதிவு செய்கின்றனர்

இங்கு பணிபுரியும் சுய உதவிக்குழுவை சேர்ந்த அஞ்சுகம் என்பவர் கூறுகையில், அம்மா உணவகத்தில் சமைக்க தரமான பொருட்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் வாங்கி கொடுக்கப்படுகிறது. இந்த தரமான பொருட்களைக் கொண்டு சுகாதாரமான, சுவையான உணவினை நாங்கள் சமைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறோம். அம்மா உணவகத்தினால் ஏழை- எளிய மக்கள் மிகவும் பயனடைகின்றனர். அரசு இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அம்மா உணவகத்திற்கு சாப்பிட வருபவர்கள் பலர் இங்கு வழங்கப்படும் உணவுகள் தரமானதாகவும், சுவையாகவும் இருப்பதாக கூறுவது மட்டுமல்லாமல் இங்கு வைக்கப்பட்டுள்ள நோட்டு புத்தகத்தில் நிறை, குறைகளை பதிவு செய்து தங்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு கையெழுத்திட்டு சென்றுள்ளனர், என்றார். தற்போது அம்மா உணவகத்தில் பொதுமக்களின் வருகை சராசரியாக உள்ளதாகவும், ஒரே வகையான உணவு வழங்குவதால் சலிப்பாக உள்ளதாகவும், அம்மா உணவகங்களில் வித, விதமான உணவுகள் கிடைத்தால் நன்றாக இருக்கும் எனவும் சாப்பிட வந்த பொதுமக்கள் சிலர் கூறி சென்றனர்.


Next Story