நஞ்சுண்டேஸ்வரர்-தேவகிரி அம்மன் திருக்கல்யாணம்
எடப்பாடியில் சித்திரை திருவிழாவையொட்டி நஞ்சுண்டேஸ்வரர்-தேவகிரி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது.
எடப்பாடி
எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜை, சாமி வீதி உலா, சிறப்பு அபிஷேகம் உள்பட பல்வேறு வழிபாடுகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான சாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நஞ்சுண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதையொட்டி பலவகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில், நஞ்சுண்டேஸ்வரர்-தேவகிரி அம்மன் எழுந்தருள, தொடர்ந்து சிறப்பு யாகம், பூஜைகள் நடந்தன. வேத மந்திரம் முழங்க சிவாச்சாரியார்கள் தேவகிரி அம்மனுக்கு மங்கல நாண் சூட்டினர். தொடர்ந்து பெண் பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலி கயிறு, பூ, வளையல் உள்பட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து முத்து ரதத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது.
இன்று (வியாழக்கிழமை) மாலை தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி விநாயகர், நஞ்சுண்டேஸ்வரர்-தேவகிரி அம்மன், வள்ளி-தெய்வானை உடனமர் சுப்பிரமணியர் தனித்தனி தேர்களில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.