அம்மாபேட்டை ஒன்றியக்கூட்டத்தில் 14 கவுன்சிலர்கள் வெளிநடப்பு


அம்மாபேட்டை ஒன்றியக்கூட்டத்தில்  14 கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 28 Sep 2022 7:30 PM GMT (Updated: 28 Sep 2022 7:30 PM GMT)

அம்மாபேட்டை ஒன்றியக்கூட்டம்;

ஈரோடு

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 17 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான கவுன்சிலர் கூட்டம் நேற்று அம்மாபேட்டை ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றிய தலைவர் விஜயநிர்மலா சரவணபவா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், 17 வார்டுகளில் இருந்து, 16 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டனர். இதையடுத்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் குகானந்தம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், வார்டு கவுன்சிலர்கள் முன்னிலையில் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. அப்போது கவுன்சிலர்கள், அனைத்தும் செலவு தொகை மட்டுமே காட்டப்பட்டுள்ளது. வார்டு பகுதிக்கு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளுக்கு உண்டான திட்டங்கள் எதுவும் தீர்மானத்தில் இல்லை. அரசியல் தலையீட்டின் காரணமாக பல்வேறு திட்ட பணிகள் முடக்கப்பட்டுள்ளது. இதனால் வார்டு பகுதிகளில் பொது மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம் என கூறி கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இக்கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க.வை சேர்ந்த 9 கவுன்சிலர்கள், பா.ம.க.வை சேர்ந்த 2 கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க.வை சேர்ந்த 3 கவுன்சிலர்கள் என 14 பேர் தீர்மானங்களை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து கவுன்சிலர்கள் கூறும்போது, 'ஊராட்சி ஒன்றிய அலுவலக நிர்வாகத்தில் அரசியல் தலையிட்டால் எங்களது ஒப்பந்த பணியில் குறுக்கீடு செய்வதை தடுத்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.


Next Story