பிரதமரை தேர்வு செய்யும் கூட்டணியில் இடம்பெறும்
பிரதமரை தேர்வு செய்யும் கூட்டணியில் அ.ம.மு.க. இடம்பெறும் என்று கோவையில் டி.டி.வி.தினகரன் கூறினார்.
கோவை
பிரதமரை தேர்வு செய்யும் கூட்டணியில் அ.ம.மு.க. இடம்பெறும் என்று கோவையில் டி.டி.வி.தினகரன் கூறினார்.
செயல்வீரர்கள் கூட்டம்
கோவை ஒருங்கிணைந்த மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயல்வீரர்கள் கூட்டம் கோவையில் நடந்தது. துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உடுமலை சண்முகவேலு தலைமை தாங்கினார்.
மாநகர் மாவட்ட செயலாளர் என்.ஆர்.அப்பாத்துரை, தெற்கு மாவட்ட செயலாளர் பி.சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் வரவேற்றார். கூட்டத்தில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வீழ்ச்சியைசந்திக்க போகிறார்
கடந்த 2021-ல் நடந்த சட்டமன்ற தேர்தலுக்காக, வடதமிழக மக்களை ஏமாற்ற வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 4 ஆண்டுகால ஆட்சியில் அறிவிக்காமல், தேர்தல் நேரத்தில் அதை அறிவித்தது வன்னியர்களை ஏமாற்றுவதற்காகதான். தென்தமிழகத்தில் உள்ள மக்களும் தற்போது அவருக்கு எதிராக உள்ளனர். அவர் தனது தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அவர் செய்த தில்மு, முல்லு வேலைகள் மக்களை வெகுண்டு எழ செய்து உள்ளது.
இது அவருக்கு அரசியல் ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பயந்துதான் கடந்த 2 ஆண்டாக பசும்பொன்னுக்கு எடப்பாடி பழனிசாமி வரவில்லை. தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது என்பதால் அவர் வருகிறார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பெரும் வீழ்ச்சியை சந்திக்க போகிறார்.
பிரதமரை தேர்வு செய்யும் கூட்டணியில் அ.ம.மு.க. இடம்பெறும். ஒரு வேளை கூட்டணியில் இருக்க முடியாத சூழல் இருந்தால் தனித்து போட்டியிடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஜெயலலிதா ஆட்சி
நல்ல உள்ளம் கொண்டவர்கள் எங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பான செயல்பாட்டை நாங்கள் செய்வோம். நாங்கள் யாரையும் நம்பி இந்த கட்சியை தொடங்கவில்லை. இது தொண்டர்களை நம்பி, ஜெயலலிதா ஆட்சியை அமைக்க தொடங்கப்பட்ட இயக்கம். எனவே தமிழகத்தில் நாங்கள் கண்டிப்பாக ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்.நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இன்னும் முடிவு செய்யவில்லை.
இது தொடர்பாக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதிக்குள் பூத் கமிட்டி நிர்வாகிகள் அமைக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.ரோகிணி கிருஷ்ணகுமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.